Skip to main content

'எந்த முகத்தை வைத்துக்கொண்டு வருகிறார் மோடி' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
'Which face is Modi coming with'- CM Stalin's lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையின் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து மதுரை ரிங் ரோடு பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ''சு.வெங்கடேசனையும், கார்த்தி சிதம்பரத்தையும் மீண்டும் இரண்டாவது முறையாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தயாராகி விட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மக்களிடையே இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக இந்தியா கூட்டணியின் பிரதமர் ஆட்சி செய்வார்.

இன்னும் ஒரே வரியில் சொன்னால் இப்பொழுது இருக்கக்கூடிய பிரதமர் மாதிரி நிச்சயம் இருக்க மாட்டார். பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டுக்கு எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி இப்பொழுது வாக்கு கேட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. பக்கத்து மாவட்டங்களில் வெள்ளத்தால் தவிச்சாங்களே அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்தாரா? இல்லை. எந்த முகத்தோடு மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளுகின்ற எல்லா மாநிலங்களையும் வஞ்சிக்கிறார்.

பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்கள் நலத்திட்டங்களுக்கு கடன் வாங்கக்கூட உச்சநீதிமன்றத்திற்கு போகின்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். மோடி கர்நாடகா வறட்சி நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டி இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த ரெண்டு மாநில முதலமைச்சர்களும் டெல்லி சாலையில் போராடுகின்ற அவலநிலையை உருவாக்கி இருக்கிறார் பிரதமர். மேற்கு வங்கத்திற்கும் இதேநிலைமைதான். மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது குதிரை பேரம் நடத்தி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைத்தார். ஆளுங்கட்சியை உடைத்து இப்பொழுது அந்த மாநிலத்தையும் நாசமாக்கி விட்டார்கள். அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின முதலமைச்சரை கைது செய்துள்ளார். டெல்லி, பஞ்சாபிலும்  ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை வைத்து தொல்லை கொடுத்தார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளார்கள். எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் மட்டும் இ.டி, ஐ.டி, சிபிஐ, மற்றும் கவர்னர்களை வைத்து தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா'' என்றார்.

சார்ந்த செய்திகள்