Skip to main content

'வேணும்... ஆனா ஜோதிமணிக்கு கூடாது' - விருந்து வைத்து குமுறிய கரூர் காங்கிரஸ்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
'We want but not for Jyotimani'-Karur Congress held a party

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கும் நிலையில் திமுகவில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கரூரில் மீண்டும் ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கக்கூடாது என கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மாவட்டச் செயலாளர் சேகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் அனைவருக்கும் தடபுடலாக விருந்து கொடுக்கப்பட்டது. பிறகு நடைபெற்ற கூட்டத்தில் கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது. அவர் தொகுதியில் சரிவர பணியாற்றாமல் இருக்கிறார். பொதுமக்கள் மற்றும் சொந்த கட்சியினரிடம் சரியான அணுகுமுறை இல்லாமல் நடந்து கொள்கிறார். கூட்டணிக் கட்சிகளிடையேயும் வெறுப்புணர்வை உருவாக்குகிறார் எனக் கூறி அவருக்கு மீண்டும் சீட்டு வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்டச் செயலாளர் சேகர், ''தமிழக தலைமையிடமும் நிர்வாகிகளிடமும் மோதல் போக்கை கடைப்பிடித்து கட்சிக்கு களங்கம் உண்டாக்கிக் கொண்டிருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கரூர் தொகுதி காங்கிரசுக்கு வரவேண்டும். ஆனால் ஜோதிமணிக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய ஒட்டுமொத்த கருத்து'' என்றார்.

சார்ந்த செய்திகள்