தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்து, இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே வேட்பாளர்கள் தங்களுடைய வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரங்களை துவங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் திருச்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்பழகனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என்.நேரு பூத் கமிட்டி மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில், தங்களுடைய உழைப்பை இந்த உள்ளாட்சித் தேர்தலில் தரவேண்டும் என்று தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “திருச்சி மாநகரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடுகள் தருவது, முதியோர் உதவித்தொகை என்று பொது மக்களின் அடிப்படைத் தேவைகளையும், மேலும் படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மூலமாக மணப்பாறையில் சிப்காட் வளாகம் அமைக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல் இராணுவ தடவாளம் உற்பத்தி செய்கின்ற HAPP போல இந்தியாவில் இருக்கிற தளவாடங்களை உற்பத்தி செய்கிற தொழிற்சாலையும் திருச்சியில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் முதலமைச்சரால் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 21 மாநகராட்சி, 128 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கிறது. அதில் முதலமைச்சர் 2,000 கோடி நிதி ஒதுக்கி, அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக திருச்சிக்கு மட்டும் 128 கோடிக்கு திட்டங்கள் வந்துள்ளது. மத்திய அரசு சுற்றுச்சூழல் தரப்பில் இருந்து இந்தியாவில் உள்ள 45 பெரு நகரங்களில் ஒவ்வொரு நகரத்திற்கும் சுற்றுச்சூழல் சரிபடுத்துவதற்காக 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய 3 நகரங்களுக்கு சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திருச்சி மாநகர மக்கள் 1000 பேருக்கு தேர்தல் முடிந்து பட்டா வழங்க இருக்கின்றோம்.
மாநகர் பகுதிகளில் இலவச பட்டா வழங்ககூடாது என அவசர சட்டம் வந்தது. அதை கலைஞர் மாற்றினார். திருச்சி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க உள்ளோம். மேலும் திருச்சி மாநகர் 27வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அன்பழகன் வெற்றிப் பெற்று திருச்சி மாநகர மேயராக வர வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கேட்டு உள்ளோம். அதை செய்து தருவார் என நம்புகிறோம்” என்று கூறினார். மேலும் திமுக கூட்டணி கட்சியான 23வது வார்டில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுரேஷ் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் வைரமணி, முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மேயர் வேட்பாளரான அன்பழகன், பகுதி கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.