Skip to main content

நம் தரத்தை உயர்த்தும் மொழி தமிழ்!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 

முதுபெரும் தமிழறிஞர் கவிக்கோ ஞானச்செல்வனாருக்கு திருவாரூரில் பாராட்டு விழா நடந்தது. அவரது  50 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ்ப் பணியையும், படைப்புப் பணியையும்  பாராட்டும் விதமாக, அவருடைய   முன்னாள் மாணவர்களும் காமராஜர்  கல்வி அறக்கட்டளையினரும்  இணைந்து  இவ்விழாவை நடத்தினர்.

 

Thiruvarur



வேலுடையார் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி தலைமையில் நடந்த இந்த விழாவில், தமிழறிஞர் ஞானச்செல்வனாரைப்  பாராட்டியப் பேசிய முன்னாள் அரசவைக் கவிஞரும் பாடலாசிரியருமான முத்துலிங்கம் ”தமிழுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார் ஞானச்செல்வன்.  தமிழகத்தின் மூத்த தமிழறிஞரான அவர், தமிழாசிரியர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தவர். தமிழ் ஊடகங்களில் பணியாற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் செய்தி அறிவிப்பாளர்களுக்கும், தமிழைப் பிழையில்லாமல் உச்சரிக்கச் சொல்லிக்கொடுத்தவர். இப்போதும் கூட தமிழைப் பிழையிலாமல் பேசவும் எழுதவும்  பலருக்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் .இப்படிப்பட்ட தமிழறிஞர்களால்தான் தமிழன்னை இன்னும் இளமை நலம் குன்றாமல், தன் கட்டுக்கோப்பும்  மரபுத் தன்மையும் மாறாமல் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறாள்.
 

உலகின் தொன்மையான மொழிகளில் தலையாய மொழியாக நம் தமிழ்மொழி திகழ்கிறது. உலகில் இருக்கும் ஆறாயிரம் மொழிகளில், தொன்மைச் சிறப்போடு, தனித்து இயங்கும் வல்லமையோடு தமிழ்மொழி விளங்குகிறது. உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாகத் திகழ்வது தமிழ்மொழிதான் என்று இன்று உலகளாவிய ஆய்வாளர்கள் அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.  


 

அப்படிப்பட்ட   தமிழுக்கு இன்று நம் தமிழ்நாட்டிலேயே பலவகையிலும்  ஆபத்துகள் சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடப் புத்தகங்களிலேயே, தமிழின் தொன்மைச் சிறப்பைக் குறைத்துக்காட்டும் அளவிற்கு நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய இழிவிலிருந்து தமிழைக் காப்பாற்ற, ஞானச்செல்வனாரைப்  போன்ற அறிஞர்களின் தொண்டு  நமக்குத் துணையாக இருக்கிறது. எனவே தமிழுக்குத் தொண்டாற்றும் ஞானச்செல்வனாரைத் தமிழுலகம் கொண்டாடவேண்டும்.  தமிழக அரசு  அவருக்கு விருதுகளைக் கொடுத்துப் பாராட்டவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.


 

ஏற்புரையாற்றிய ஞானச்செல்வனார் ”நம் தமிழ்மொழி ஒழுக்கம் கலந்தமொழி. அதைக் கற்க மறந்ததால் இப்போதைய பிள்ளைகளிடம் ஒழுக்கம் குறைந்துவருகிறது. இங்கே பிறமொழியைப் படிப்பவர்களும் தமிழைக் கற்கவேண்டும். ஏனென்றால் அது படிப்பவர்களின் மனத்தையும் தரத்தையும் உயர்த்தும் தன்மைகொண்டது. நாம் துறைதோறும் தமிழை வளர்க்கப் பாடுபடவேண்டும். நமக்கிடையே எத்தகைய வேற்றுமைகள்  இருந்தாலும், நாம்  உணர்வோடு ஒன்றுபட்டுத் தமிழை வளர்க்கவேண்டும். தமிழ் நம் ஆடையல்ல; அடையாளம்” என்றார்.
 

விழாவில் நகைச்சுவை நாவலர் இரெ.சண்முகவடிவேல் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஞானச்செல்வனாரை வாழ்த்திப் பாராட்டினர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'சீரோடும் சிறப்போடும் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' - தமிழக அரசு அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Second World Tamil Classical Conference with Uniformity and Excellence'-Tamil Government Announcement

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றிருந்த நிலையில், சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் கணித்தமிழும் இணைந்து நற்றமிழாகச் சிறப்புடன் திகழ்கிறது. திமுக பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதி வாய்ந்த தமிழர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்குவதோடு, தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது, பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்கால தமிழர்களின் எழுத்தறிவு, வாழ்வியல் முறைகளைப் பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்தது.

அதன் தொடர்ச்சியாக 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் நமது பண்பாட்டின் மணிமகுடங்களாகும். வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டைத் தொடர்ந்து இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.