Skip to main content

வேட்பாளர்கள் அளித்த பரிசு பொருட்களை கோயிலில் ஒப்படைத்த வாக்காளர்...!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக வேட்பாளர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களை, வேட்பாளர் ஒருவர் கோயிலில் ஒப்படைத்து விட்டு சுதந்திரமாக வாக்களிக்கப் போகிறேன் என்று கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Voter donates gift items to temple

 



தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதில் நாளை (டிசம்பர் 27) நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்க ஒலிபெருக்கி இல்லாமல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராம ஊராட்சியில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 வேட்பாளர்களும், வார்டு எண் 1-ல் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 வேட்பாளர்களும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 5 வேட்பாளர்களும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3 வேட்பாளர்களும் என 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

Voter donates gift items to temple

 



இதில், கீழக்காவட்டாங்குறிச்சி வார்டு எண்-1 ல் போட்டியிடும், கிராம ஊராட்சி தலைவர் வேட்பாளர்கள், கிராம வார்டு உறுப்பினர் வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களை குறிக்கும் வகையில் பரிசு பொருட்களையும், சிலர் மாற்று பரிசுப் பொருட்களையும் அப்பகுதியில் வசிக்கும் வாக்காளர்களுக்கு கடந்த சில தினங்களாக விநியோகம் செய்து வந்துள்ளனர்.

இதில், வார்டு எண்-1 ல் வசிக்கும் தையல் தொழிலாளி பச்சமுத்து (48) என்பவரின் வீட்டில் உள்ள 6 வாக்குகளுக்கும் அங்கு போட்டியிடுபவர்கள் சிலர் குத்துவிளக்கு, விளக்கு, தட்டு, சீப்பு போன்ற சில பரிசு பொருட்களை வழங்கியுள்ளனர். இதனால் மனக்குழப்பத்திற்கு ஆளான பச்சமுத்து, வேட்பாளர்கள் வழங்கிய பரிசு பொருட்களை அங்குள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து, விழுந்து கும்பிட்டு விட்டு கோயிலுக்கு பரிசுப் பொருட்களை ஒப்படைத்துச் சென்றார்.

இதுகுறித்து பச்சமுத்து கூறுகையில், "இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் எனக்கு நன்கு அறிந்தவர்கள். ஆனால், தங்களுக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி சிலர் பரிசு பொருட்களை அளித்து செல்கின்றனர். வேண்டாம் என்று கூறினாலும் திரும்ப பெற மறுக்கின்றனர். மேலும், பரிசு பொருட்களை பெறாவிட்டால், அப்போ எனக்கு வாக்களிக்க மாட்டாயா என சந்தேகப்படுகின்றனர்.

இதனால் கடந்த 4 நாட்களாக மனதுக்கு பெரிய சங்கடம் ஏற்பட்டதுடன், குழப்பத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். இதனால் எனது தூக்கம் கெடுகிறது. சரியாக வேலை பார்க்க முடியவில்லை. எனவே, இந்த பரிசு பொருட்களை கோயிலில் ஒப்படைத்தேன். சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே மறைமுகமாக வாக்குப்பதிவு நடைபெற்றாலும், இதுபோல செய்வதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோல பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்