Skip to main content

“டாக்டர்களின் வாழ்க்கையில் ஒருமுறையாவது ‘இது’ நடக்கும்!” -வி.சி.க்கள் போராட்டத்துக்கு எதிரான விளக்கம்!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

“பிரசவம் பார்க்கிறேன் என்ற பெயரில் சங்கரேஸ்வரியிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்திருக்கின்றனர். சங்கரேஸ்வரியும் அவர் பெற்றெடுத்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டார்கள். சுயலாபம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட கொலைகார டாக்டர்களால்தான் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. நீதிகேட்ட சங்கரேஸ்வரியின் கணவர் காளிராஜனை சாதி ரீதியாகத் திட்டியிருக்கின்றனர்.
 

புகார் மனு அளித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகாசி காவல்துறை துணை கண்காணிப்பாளர், விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை, விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை என அனைத்துத் துறையினரும் டாக்டர்கள் மீதான புகாரைக் கண்டுகொள்ளவே இல்லை.  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தலித்துக்கள் என்பதால்தான் இத்தனை அலட்சியம். தாய், சேய் ஆகிய இருவரையும் மருத்துவம் என்ற பெயரில் கொலை செய்த கொலைகார டாக்டர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்காததால்தான், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். தூங்கும் அரசாங்கத்தைத் தட்டி எழுப்புவோம்.” என்றார்கள் விருதுநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். 

VIRUDHUNAGAR DISTRICT SIVAKASI HOSPITAL WOMEN INCIDENT VSK PARTY



விவகாரம் இதுதான் - 
 

மூன்றாவது குழந்தைக்கான கர்ப்பம் தரித்ததும், சிவகாசி அரசு மருத்துவமனையைச் சார்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆலோசனையும், சிகிச்சையும் பெற்று வந்தார் காளிராஜனின் மனைவியான சங்கரேஸ்வரி. பேறுகால நாட்கள் நெருங்கியபோது, சிவகாசியில் கனிலட்சுமி மருத்துவமனை நடத்திவரும் டாக்டர் காமராஜ் “உன்னுடைய குழந்தை நல்லமுறையில் பிறக்கவேண்டுமென்றால் சபரிசாய் மருத்துவமனைக்குச் செல். கல்பனா கைராசியான டாக்டர். சிகிச்சையின்போது நானும் உடனிருப்பேன்.” என்று வற்புறுத்தினாராம். 

VIRUDHUNAGAR DISTRICT SIVAKASI HOSPITAL WOMEN INCIDENT VSK PARTY


சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மூத்த சிவில் சர்ஜனான கல்பனா, சபரிசாய் நர்சிங் ஹோம் என்ற பெயரில் தனியாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு பிரசவம் நடந்தபோது செவிலியர்கள் நால்வர் ஆளாளுக்கு வயிற்றை அமுக்கினார்களாம். டாக்டர் கல்பனாவும் டாக்டர் காமராஜும் உடன் இருந்தார்களாம்.  கடுமையான வலியுடன் ஆண் குழந்தை பிறந்தாலும், ரத்தபோக்கு தொடர்ந்திருக்கிறது. சங்கரேஸ்வரி மிகவும் சோர்ந்துவிட்ட நிலையில், காளிராஜனை அழைத்து “இனி உன் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற எங்களால் முடியாது. கடவுள்தான் காப்பற்ற வேண்டும்.”என்று கூறி, அதே ஊரிலுள்ள அருணா குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்ப, அங்கிருந்த டாக்டர் “தாமதிக்காமல் மதுரைக்குக் கொண்டு செல்லுங்கள்.” என்று கூறிவிட, அந்தத் தனியார் ஆம்புலன்ஸ் மதுரைக்கு விரைந்திருக்கிறது. ஆனால், சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லைக் கடந்தபோதே, சங்கரேஸ்வரி மிக ஆபத்தான கட்டத்தை அடைந்திருக்கிறார். உடனே காளிராஜன் கல்பனாவை தொடர்புகொள்ள, அவரோ ஆம்புலன்ஸ் டிரைவரிடம் போனைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.  “பக்கத்தில்தானே இருக்கிறது சிவகாசி அரசு மருத்துவமனை. அங்கு கொண்டுபோய் விட்டுவிடு.” என்று கூறியிருக்கிறார். 

VIRUDHUNAGAR DISTRICT SIVAKASI HOSPITAL WOMEN INCIDENT VSK PARTY



சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார் சங்கரேஸ்வரி. அந்த நிலையிலும் காளிராஜன் “அரசு முறைப்படி போஸ்ட்மார்ட்டம் செய்துவிட்டு உடலைத் தாருங்கள்.” என்று கூற, தலைமை மருத்துவர் அய்யனார் “அதெல்லாம் வேண்டாம். நீங்க போயி நல்ல முறையில் அடக்கம் செய்யுங்கள்.” என்று ஏனோ விதிகளை மீறி உடலை ஒப்படைத்திருக்கிறார். மறுநாள், சங்கரேஸ்வரி பெற்றெடுத்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டது. 

VIRUDHUNAGAR DISTRICT SIVAKASI HOSPITAL WOMEN INCIDENT VSK PARTY



நம்மைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் (பயிற்சி) கதிரவன் “காளிராஜன் எங்களிடம் முறையிட்டார். சங்கரேஸ்வரியின் இறப்பில் கல்பனா, காமராஜ், அய்யனார் ஆகிய மூன்று டாக்டர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. அந்த நேரத்தில் சொந்தமாக வைத்திருக்கும் கிளினிக்கில் இருந்துவிடுகின்றனர். அரசாங்கம் தரும் சம்பளத்தைக் காட்டிலும் தனியாக கிளினிக் நடத்துவது லாபகரமானது என்பதால், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர். இதன்மூலம், அரசு மருத்துவமனைக்குச் சென்றால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றனர். அரசு மருத்துவர்கள் மீது  இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டுகள் எப்போதும் சுமத்தப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் அரசு மருத்துவர்கள் யாரும் தனியார் மருத்துவமனைகளை நடத்தக்கூடாது என்று உத்தரவே பிறப்பித்துவிட்டனர். இ.எஸ்.ஐ.யில் வேலை பார்க்கும் அரசு மருத்துவர் என்பதாலோ என்னவோ, தன்னுடைய கிளினிக்கில் பிரசவம் பார்க்க வந்த சங்கரேஸ்வரியிடமும் வழக்கம்போல் அலட்சியமாக நடந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது.” என்றார் ஆதங்கத்துடன்.  
 

VIRUDHUNAGAR DISTRICT SIVAKASI HOSPITAL WOMEN INCIDENT VSK PARTY





 

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவர் கல்பனா நம்மிடம் பேசுவதைத் தவிர்த்த நிலையில், அவருடைய கணவர் பாலமுருகன் பேசினார். 
 

“துறை ரீதியான விசாரணையை கல்பனா சந்தித்திருக்கிறார். ரிஸ்க் நிறைந்த  டாக்டர்களின் பொது வாழ்க்கையில் ஒருமுறையாவது இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்கிறார்கள் மருத்துவத்துறையில். சங்கரேஸ்வரி என்ன ஜாதியென்று அவர் இறக்கும் வரையிலும் கல்பனாவுக்குத் தெரியாது. அவர் எப்படி இறந்தவரின் கணவரை ஜாதியைச் சொல்லி திட்டுவார்? காட்டுமிராண்டித்தனமான சிகிச்சை என்று சொல்வதும் கொலை செய்தோம் என்று அபாண்டமாகப் பழி சுமத்துவதும் கொடுமையானது. சங்கரேஸ்வரிக்கு பிரசவம் நடந்தபோது என்னமாதிரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதென்று விசாரணையின் போது தெளிவுபடுத்திவிட்டார் கல்பனா. சங்கரேஸ்வரி இறந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. பிரசவ நேரத்தில் சங்கரேஸ்வரியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு எந்த அளவுக்கு டாக்டர்கள் போராடினார்கள் என்பதை அவருடைய கணவர் நன்றாகவே அறிந்திருந்தார். அதனால்,  அப்போது ஒரு பிரச்சனையும் எழவில்லை. இப்போது, திடீரென்று போராட்டமெல்லாம் நடத்துகிறார்கள்.” என்று வேதனைப்பட்டார்.  
 

மருத்துவம் என்பதே சேவைதான்! இதனை உணர்ந்து அர்ப்பணிப்போடு செயல்படாவிட்டால் ‘ஆபத்து’நோயாளிகளுக்கு மட்டுமல்ல!
 

சார்ந்த செய்திகள்