Skip to main content

வைரஸ் காய்ச்சலுக்கு முதியவர் பலி!

Published on 13/11/2018 | Edited on 13/11/2018

 

v


சேலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு முதியவர் பலியானார்.


சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (65). ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்து வந்தார். மனைவி, குழந்தைகள் இல்லாததால் ஜெயராமன் மட்டும் தனியாக ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.


கடந்த 9ம் தேதி ஜெயராமனுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கடுமையான வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திங்கள் கிழமை (நவம்பர் 12, 2018) காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


உறவினர்கள் யாரும் இல்லாததால், ஜெயராமனின் சடலம் பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்றும் கடுமையான வைரஸ் காய்ச்சல்தான் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெயராமன் வசித்து வந்த பகுதியில் தீவிர துப்புரவு பணிகளுக்கு முடுக்கிவிடப்பட்டு உள்ளது. டெங்கு தடுப்புக்குழுவினர் இப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சேலத்தில் சக்கை போடு போடும் போதை மாத்திரை கும்பல்; பிடிபட்ட அதிர்ச்சி தகவல்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Salem addiction pills

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள், உடல்  உழைப்புத் தொழிலாளர்கள் கள், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட மாற்று போதைப் பொருட்களைத் தேடிச்செல்கின்றனர். குறிப்பாகச் சேலத்தில் இளைஞர்கள் அண்மைக் காலமாக போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. தூக்க மாத்திரைகள், ஆல்கஹால் அதிகமுள்ள சிரப் வகை  மருந்துகள், வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. ஆனாலும் விதிகளை மீறி சில மருந்துக் கடைகளில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு  வருவது தொடர்கிறது.

மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது மருந்து கடைகளில் சோதனை நடத்தி, விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும்,  இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இந்நிலையில், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் நான்கு சாலை பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், சேலம் செவ்வாய்ப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(22),  தட்சணாமூர்த்தி(22), வீரபாண்டி ராஜ வீதியைச் சேர்ந்த அர்ஜூனன்(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள், நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள மருந்து விற்பனை பிரதிநிதிகள் சிலரிடம் நேரடியாக வலி நிவாரணி மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி போதைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றைக்  கூலித்தொழிலாளர்கள், இளைஞர்களைக் குறி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனையும் செய்துள்ளனர். பத்து  மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 100 ரூபாய்க்கு வாங்கி, அதை 200 ரூபாய்க்கு விற்று வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900  மாத்திரைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப் பிறகு, சேலம் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் குறித்தும், பிடிபட்ட இளைஞர்களுடன்  வேறு யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர். இளைஞர்களின் புதிய போதைக் கலாச்சாரம், சேலம் மக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி  உள்ளது. 

Next Story

ஓமலூரில் கலப்பட மதுபானம் விற்பனை; 5 பேர் கைது

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sale of adulterated liquor at Omalur; 5 people arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 62 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்படம் மதுபானம் விற்கப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாதாரண உடையில் காவல்துறையினர் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது கலப்பட மதுபானம் விற்று வந்த 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பாட்டில்கள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.