நாட்டையே உலுக்கிய , நிர்பையா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம். ஆனாலும் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதன் தொடர்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குழந்தை சந்தேகமானநிலையில் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே , பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் வசித்து வந்தார் கோமதி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளநிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவர் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து புதுச்சேரியை சேர்ந்த ஒருவரை கோமதி காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன பின்பு இவருக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்துள்ளது. இதையடுத்து அவரின் முதல் இரு பெண் குழந்தைகளும் சொந்த ஊரில் பாட்டியிடம் வளர்ந்து வந்துள்ளது. 9 வயது மற்றும் 7 வயதான இரு சிறுமியரும் சொந்த ஊரிலேயே பள்ளியில் படித்தும் வந்தனர்.
இந்த நிலையில், பெண்ணின் உறவுக்காரர் கடந்த ஓராண்டாக இரு சிறுமியரையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் , குழந்தைகளை மிரட்டியுள்ளார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு சிறுமியரின் தாய் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது, தங்களுக்கு நடந்த கொடூரங்களை தாயிடம் கூறி குழந்தைகள் அழுதுள்ளது. உறவுக்காரர்களே தனது குழந்தையின் வாழ்கையை அழித்துவிட்டார்களே என்று அதிர்ச்சி அடைந்த கோமதி குழந்தைகளை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளியி்ல் சேர்த்து விட்டார் .
இந்த விவகாரத்தில் கோமதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் சொந்தங்கள் மத்தியில் கோமதிக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் உறவினர்களின் மிரட்டலால் கோமதி புகார் எதுவும் கொடுக்கவில்லை. சில நாட்களாக மூத்த சிறுமியின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் , பள்ளியில் ஆசிரியை அதைக் கவனித்துள்ளார். சிறுமியிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை அவர் சொல்லவே அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, உடனடியாக பள்ளி நிர்வாகம் மூலம் புதுச்சேரி சைல்டு லைனுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
சைல்டு லைன் அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவிற்குத் தகவல் தெரிவித்து அதிகாரிகள் பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அதிகாரிகளின் விசாரணையில் நடந்த சம்பவம் உண்மை எனத் தெரியவரவே, சிறுமியர் இருவரும் புதுசேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு ,போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட 14 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் திண்டிவனம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் ஜாமினில் வெளியே வந்து உள்ளார்கள். இந்தநிலையில் சிறுமி திடீர் என்று தற்போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெரும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. வழக்கில் சம்மந்தப்பட்டவர் மிரட்டலாலும், வழக்கில் தண்டனை கிடைத்துவிடுமோ என்பதால் அதில் இருந்து தப்பிக்க குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பிரேதபரிசோதனை அறிகை வந்த பின்னரே அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட்டும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.