Skip to main content

"உயர் அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்" - இன்ஸ்பெக்டர் மனைவி கதறல் 

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

villupuram district police inspector and sub inspector suspend  issue 

 

போலீஸ் இன்ஸ்பெக்டரான தனது கணவரை சஸ்பெண்ட் செய்ததற்காக, மனைவி  இரண்டாவது முறையாகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கடந்த 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்  சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் மகன் ராஜா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் எனக் கூறி அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கடந்த 25 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். சக திருநங்கைகளால் அவர் மீட்கப்பட்டு  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், "சூரப்பட்டு ராஜாவும் நானும் காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ராஜாவின் குடும்பத்தினர் எங்கள் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜா தற்கொலை செய்து கொண்டார். அவரைப் பிரிந்து என்னால் வாழ முடியாது என்பதால் நான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார்". 

 

உரிய விசாரணை செய்து முறையாக வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூறி கிடார் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுதா ஆகிய இருவரையும் டிஐஜி பாண்டியன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 31ஆம் தேதி நள்ளிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரின் மனைவி சரஸ்வதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கணவரை பழிவாங்கும் நோக்கத்துடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அவரது போராட்டத்தைத் தடுத்து நிறுத்தி அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த அவரது கணவர் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் முன்பாக சரஸ்வதி தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயல, சக போலீசார் உதவியுடன் தடுத்து நிறுத்தி இன்ஸ்பெக்டர் தன் மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார் . இந்த நிலையில் நேற்று வீட்டில் மீண்டும் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

நேற்று தனது செல்போன் மூலம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சரக டிஐஜி ஆகியோருக்கு போன் மூலம் குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அதில், "உயர் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக எனது கணவரை பணி நீக்கம் செய்துள்ளனர். எனவே எனது கணவருக்கு நியாயம் கிடைக்கச் செய்வேன். எனது இறப்புக்குப் பிறகு எனது பிள்ளைகளுக்கும், கணவருக்கும் உயர் அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்" என்று குறுந்தகவலில் குறிப்பிட்டுள்ளார்.  வழக்கறிஞரான அவர் இது குறித்து தான் சார்ந்திருக்கும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சிலருக்கும் செல்போன் மூலம் அதே குறுந்தகவல் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து உரிய விசாரணை நடத்துமாறு  காவல்துறை தலைவருக்கு மனு அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்