Skip to main content

“தாமரை ஊரார் வீட்டில் ரெண்டகம் செய்வது அநாகரீகமான செயல்” - கொந்தளித்த விஜி

Published on 30/12/2022 | Edited on 02/01/2023

 

viji palanisamy talk about her husband and lyricist thamarai

 

கல்யாணம் ஆன பத்தே நாளில் அவர் என்னை எப்படி துன்புறுத்தினார் என்று தெரியுமா? இன்னொரு பெண் கிடைக்கும் வரை என்னைவிட்டு போயிடாத விஜின்னு சொன்ன ஆடியோவை பற்றி ஏன் யாருமே பேசவில்லை. இப்படி தன் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் விஜி பழனிசாமி என்பவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்கிற ரத்தினசீலன். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த விஜி பழனிசாமி என்ற பெண்ணுக்கும், இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி கல்யாணமும் நடந்தேறியது. ஆனால், கல்யாணத்திற்குப் பிறகுதான் மனைவி விஜியின் தகாத உறைவைப் பற்றி விரிவாக தெரிந்துகொண்டதாகக் கணவர் சிவா 43 ஆடியோக்களை பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையில், பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை, இந்தப் பெண்ணால்தான் தனது வாழ்வும் நாசமானது எனப் பகிரங்கமாகப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில், இதுவரை மவுனமாக இருந்து வந்த விஜி பழனிசாமி, தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு,

 

மௌனித்து இருப்பதால் குற்றவாளி என்று பொருள் அல்ல..

 

கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் பரப்பப்படும் அவதூறு செய்திகள் பற்றி பேச என்னிடம் ஏதுமில்லை. தனிப்பட்ட நபர்களின் காழ்ப்புணர்ச்சியாலும், ஊடகங்களின் அறமற்ற செயல்களால் பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதிலளிக்கும் அளவிற்கு என் மனநிலை இல்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக கவிஞர் தாமரையின் தற்குறித்தனமான தரம் தாழ்ந்த செயல்களால் நானும் எனது மகள்களும் உச்சபட்ச மனஉளைச்சலில் தான் வாழ்ந்து வருகிறோம். இவர்கள் எல்லாம் பரப்பும் அவதூறுகளும், மிரட்டல்களுக்கும் வயதுக்கு வந்த எனது இருமகள்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. அதையெல்லாம் கடந்து வாழும் துணிவை அவர்களுக்கு நான் சொல்லி வளர்த்திருந்தாலும் இந்த சமூகத்தால் அவர்கள் அச்சுறுத்தப்படும் நிலையில் தான் இப்போதும் இருக்கிறார்கள்.

 

நான் சிங்கிள் மதர் என்றும், ஊடகத்துறையில் பணிபுரிவதும் ஊரறிந்த விஷயம். பண மோசடிக்காரி, பல திருமணங்கள் செய்து பிழைப்பவள், திருடி என்றெல்லாம் ஆதாரங்கள் இல்லாத அவதூறு செய்திகளை பொதுவெளியில் பேசுவதும் பரப்புவதும், அதனால் உள்ளூர மகிழ்வதும் வக்கிரமானது என்று உணராமலே, ஊருக்கு நீதி வாங்கி தர துடிப்பவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாமே? 

 

என்னால் தாமரைக்கும், இன்ன பிறருக்கும் அநீதி நடந்திருக்கிறது என்றால் தாராளமாக அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளலாம். என்னுடன் பழகும் நபர்களை எல்லாம் தவறாக சித்தரிப்பது, இக்காட்டான மருத்துவ சூழ்நிலையில் நான்இருந்த போது எனக்கு உதவ வருபவர்களிடம் எனக்கு உதவக் கூடாது என்று சொல்வது, இப்போது உள்ள சூழலில் கூட நடந்தது என்னவென்றே தெரியாமல் ஆதாரமற்ற செய்திகளை பரப்பி மகிழும் செயல்களால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை.

 

தமிழுக்காகவும், பெண்ணுரிமைகளுக்காகவும் மட்டுமே வாழும் தாமரை அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேட்க வேண்டிய இடத்தில் கேட்காமல் ஊரார் வீட்டில் ரெண்டகம் செய்வது அநாகரீகமான செயல். ஒரு பெண் தான் பார்க்கும் நபர்களுடன் எல்லாம் தவறான உறவில் தான் இருப்பார் என்றால் அது தாமரை என்ற பெண்ணுக்கும் பொருந்தும் தானே ?

 

கோவையை சேர்ந்த ரத்னசீலன் என்ற நபரை நான் சந்தித்த பிறகு இருவரும் விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டோம். அது ரத்னசீலன் குடும்பத்துக்கும் தெரியும். அதே போல ரத்னசீலன் வீட்டில் நான் தங்கியிருந்தவரை அவர்கள் என்னை நன்றாகவே பார்த்துக்கொண்டார்கள். இப்போது ரத்னசீலனது உறவினர்கள் மாறிமாறி பேசுவது போல, என்னால் மாற்றி பேச இயலாது. அவர்களை அசிங்கப்படுத்த நான் விரும்பவில்லை. தாமரை சொல்வதுபோல சொகுசுவாழ்க்கை, விமானம், பணத்திற்கு வேசமிடும் பெண்ணாக நானிருந்தால், ஏற்கனவே வரம்புமீறிய கடனில் இருக்கும், வாடகை வீட்டில் வசிக்கும், மாதம் 23 ஆயிரம் சம்பளம் வாங்கும் ரத்னசீலனை திருமணம் செய்திருப்பேனா.?

 

ரத்னசீலன் ஒருவித மன உளைச்சளிலே தான் வாழ்ந்து வந்தார். அது அவரது குடும்ப மற்றும் கடன் பிரச்சினை. புதிதாக இணைந்த என்னிடம் அதுபற்றி முழுமையாக பகிர அவர் விரும்பவில்லை. அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது. திருமணமான பத்தே நாளில் ரத்தம் வர என்னை அடித்து துன்புறுத்தியது ரத்னசீலன் அப்பா, அம்மா மற்றும் அவர்கள் குடியிருக்கும் வீட்டு ஓனர் வரை அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அதன் பிறகு காவல்நிலையத்தில் புகார் அளிக்க நான் முடிவெடுத்த போது ரத்னசீலன் அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க நான் அமைதியாக இருந்துவிட்டேன். அந்த அடிதடி பிரச்சினைக்கு பிறகும் சமரசம் செய்து இணைந்து வாழ விரும்பினேன். ரத்னசீலன் நடவடிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என்பதால் சண்டைக்கு பிறகான நான்காவது நாள் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

 

இன்று மீடியாக்களுக்கும், சமூக வலைதளங்களிலும் பேசும் ரத்னசீலன் உறவினர்கள் யார் ஒருவரும் நான் ஏன் போனேன், அதன் பிறகு என்ன நடந்தது என்று இன்றுவரை ஒருவர் கூட என்னிடம் கேட்கவில்லை. மட்டுமின்றி ரத்னசீலன் இறந்த பிறகு எவர் ஒருவரும் என்னிடம் அவர் இறந்த செய்தியை கூட சொல்லவில்லை. அதே போல இறந்துபோன ரத்னசீலன் பேசிய ஆடியோக்களை மட்டுமே வைத்துக்கொண்டு அவதூறும் பரப்புவர்களுக்கு ஒரு கேள்வி, இன்னொரு பெண் எனக்கு கிடைக்கும் வரை என்னைவிட்டு போய்விடாதே, என் மரணத்துக்கு நீ காரணமில்லை என்றெல்லாம் ரத்னசீலன் பேசிய ஆடியோக்களை பற்றி ஏன் பேசவில்லை. ?.. ஏனென்றால் உங்கள் நோக்கம் ரத்னசீலனுக்கு நீதி பெறுவது இல்லை, அதன் வாயிலாக பிறரை துன்புறுத்தி மகிழ்வதே. இறந்து போன ரத்னசீலன் பற்றி எதுவொன்றையும் பேசி பிழைப்பு நடத்தும் கேவலமான நிலையில் நானில்லை. அவரது இறப்பு எனக்கு இழப்புதான்.

 

என் மீது பரப்பப்பட்ட, பரப்பப்படும் அனைத்து அவதூறுகளுக்கும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளத் தயாராகிவிட்டேன். என்மீது குற்றம் சுமத்துபவர்கள் தயவுசெய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் சந்திக்க எப்போதும் நான் தயார். விரைவில் மீடியாவையும் சந்திப்பேன். மனிதத்தன்மையற்ற பிறரது முன் முடிவுகளுக்கும், முகாந்திரமற்ற அவதூறுகளுக்கும் பதில் சொல்லும் மனநிலையில் நானில்லை.

 

தனி மனிதியாக இரு மகள்களுடன் வாழும் எனக்கோ என் மகள்களுக்கோ ஏதேனும் அசம்பாவிதமோ உயரிழப்போ ஏற்பட்டால் அதற்கு கவிஞர் தாமரையும், ரத்னசீலன் சகோதரியான கந்துவட்டி தொழில் நடத்தும் பானுப்பிரியாவும் தான் முழுக்காரணம். அவதூறுகளை பரப்பி வாழும் தாமரைக்கும், அவரது பக்க வாத்தியங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ( குறிப்பு - இது அனுதாபப் பதிவல்ல.)” இவ்வாறு அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்