Skip to main content

மாணவர்களின் இன்னலைப் போக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்; தலைமைச் செயலாளர் பாராட்டு

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

vellore pasmarpenda village school teacher good approach chief secretary appreciate

 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்து பாஸ்மார்பெண்டா மலைக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து பள்ளிக்குச் சென்று வர பேருந்து வசதியும் இல்லை. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் சுமார் 4 கிலோமீட்டர் வரையிலான தூரத்தை நடந்து பள்ளிக்கு வருகின்றனர். இதனால் மாணவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.

 

இதையடுத்து அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தினகரன் (வயது 39) என்பவர் மாணவர்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் முயற்சி எடுத்து வந்தார். அந்த வகையில் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களின் சிரமத்தை போக்கவும், மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை குறைக்கவும் சொந்தமாக ஆட்டோ வாங்கி பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வருகிறார். இதற்கென அவர் எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. மேலும், ஆட்டோவை அவரே இயக்கியும் வருகிறார். ஆசிரியரின் இந்த மனிதாபிமான செயல் சமீபத்தில் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதையடுத்து ஆசிரியரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வந்தனர்.

 

இந்நிலையில் ஆசிரியர் தினகரனின் செயலை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமை செயலகத்திற்கு அவரை அழைத்து பாராட்டினார். அப்போது பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் க.அறிவொளி ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்