Skip to main content

தொடரும் குடிதண்ணீர் பிரச்சனை! கண்ணீர் விடும் மக்கள்

Published on 28/04/2019 | Edited on 28/04/2019

 

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த மேல்வேலம் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுமார் 3 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு அந்த வழியாக செல்லும் பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்துவருகின்றனர். அதோடு, ஊரிலும் சில ஆழ்துளை கிணறுகளை அமைத்து அங்கிருந்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் அனுப்பி பொதுமக்களுக்கு சப்ளை செய்கின்றனர்.

 

r

 

கடந்த 6 மாதத்துக்கு முன்பு சரியாக குடிநீர் சப்ளை செய்யாமல் வாரம் ஒருமுறை மட்டும் குழாயில் தண்ணீரை விட்டுள்ளனர். கடந்த 3 மாத காலமாக முற்றிலும் குடிநீர் வழங்குவதை நிறுத்தியுள்ளனர். குடிநீர் வழங்கப்படாததை வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் கூறியுள்ளனர், அதிகாரிகள் அதை கண்டுக்கொள்ள வில்லையாம்.

 

இதனால் அப்பகுதி மக்கள் குடிக்க தண்ணீரில்லாமல் கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். தொடர்ச்சியாக கேன் தண்ணீரை வாங்க முடியாத அளவுக்கு ஏழை மக்களின் பொருளாதார நிலையிருப்பதால், குடிதண்ணீர் தொடர்ச்சியாக கிடைக்க மாற்று வழியை ஏற்படுத்தி தர வேண்டுமென அக்கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிகுடங்கலுடன் வந்து ராணிப்பேட்டை டூ சோளிங்கர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

 

r

 

இதனால் சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. அதன்பின் வந்த அதிகாரிகள் பெண்களிடம் சமாதானம் பேசி, குடிதண்ணீர் விரைவில் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்கிறோம் என வாக்குறுதி தந்துவிட்டு சென்றனர்.

 

கடந்த 2 மாதங்களாகவே வேலூர் மாவட்டத்தில், அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, கே.வி.குப்பம், திருப்பத்தூர் பகுதிகளில் மக்கள், குடி தண்ணீருக்காக சாலைமறியல், போராட்டம் என நடத்திவருகின்றனர்.

 

குடி தண்ணீரில்லாமல் கிலோ மீட்டர் கணக்கில் சென்று கொண்டு வருவது பெண்களை கண்ணீர் விடவைத்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்