புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றிய நிஷா பார்த்திபன் எஸ்.பி பணிமாறுதலில் மத்திய அரசு பணிக்கு சென்ற நிலையில், வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்டத்தின் 50வது எஸ்.பியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிய எஸ்.பியாக வந்திதா பாண்டே வருகிறார் அன்ற அறிவிப்பு வெளியான நிலையில், அவரைப் பற்றிய தகவல்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மக்களிடம் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஏ.எஸ்.பியாக இருந்த போது, ஒரு சிறுமி பாலியல் வழக்கில் காவல்துறையைச் சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தவர்.
கரூரில் எஸ்பியாக இருந்த போது தேர்தல் நேரத்தில் ஒரே இடத்திலிருந்து கத்தை கத்தையாக பணத்தை அள்ளி வழக்கு போட்டவர். அரசியல் மிரட்டல்கள், மேல் அதிகாரிகளின் மிரட்டல்கள் என எதையும் கண்டுகொள்ளாமல் மனசாட்சியோடு பணி செய்வார் என்பது மக்களிடம் பதிந்துள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வந்திதா பாண்டே, “94899-46674 என்ற எண்ணில் பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு பேசலாம். படங்களாக, குரல் பதிவாக, குறுஞ்செய்தியாக ஆங்காங்கே நடக்கும் குற்றங்கள் பற்றி என் கவனத்திற்கு கொண்டு வரலாம். பெண்கள் குழந்தைகளுக்கான குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காணப்படும். கஞ்சா போன்றவைகள் இருப்பது பற்றி வரும் தகவல்களை பெற்று போலீசாருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். நான் ஹானஸ்டாக வேலை செய்ய வந்திருக்கிறேன்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.