ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 08.30 புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக - புதுவை கடற்கரையில் காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாகக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னை பிராட்வே அருகே உள்ள முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்.இல் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சாந்தன் என்பவர் பணம் எடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர் ஏ.டி.எம். அருகே உள்ள இரும்புக் கம்பியைப் பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் சாந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். இல் பணம் எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சென்னை பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.