Skip to main content

இங்கிலாந்து பவுண்ட் பரிசு! மோசடி கும்பலிடம் லட்சங்களை இழந்த நபர்! 

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

UK Pound Prize! The person who lost lakhs to the fraud gang!

 

திருச்சி சோமரசம்பேட்டை அதவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் குமார்(67). இவர் அந்த பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 4ம் தேதி அவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. ஒரு தனியார் செல்போன் கம்பெனி பெயரில் வந்த அந்த குறுந்தகவலில் தங்களது செல்போன் நம்பருக்கு ரூ. 3 கோடி இங்கிலாந்து பவுண்ட் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இதனை பெறுவதற்கு கீழ் கண்ட ஈமெயில் மற்றும் செல்போன் நம்பரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

தமக்கு ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சியில் நிர்மல் குமார், உடனடியாக அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் ஆர்.பி.ஐ. அனுமதி, ஜி.எஸ்.டி., உலக வங்கி அனுமதி, பதிவு செலவினம் என பல்வேறு வகைகளில் 3 வங்கி கணக்குகளில் ரூ. 6 லட்சத்தை நிர்மல் குமார் மர்ம நபர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு செலுத்தினார். 

 

இந்த நிலையில் அவருக்கு ஒரு கூரியர் தபால் வந்தது. அதில் பேங்க் ஆப் இங்கிலாந்து என்ற பெயரில் ஒரு ஏடிஎம் கார்டு வந்தது. இதை எடுத்து மீண்டும் தொடர்பு கொண்ட மோசடி கும்பல் நிர்மல் குமாரிடம், தற்போது உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் கார்டு மூலம் பரிசு தொகையை எடுத்துக் கொள்ளலாம். பெரிய தொகை என்பதால் பணத்தை ரிலீஸ் செய்வதற்கு மேலும் ரூ. 7 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறியது. ஏற்கனவே கையில் இருந்த பணத்தை இழந்த நிலையில், நண்பர் ஒருவரிடம் பணம் கடன் கேட்டார். அப்போது நடந்த விபரத்தை கூறினார். விபரம் தெரிந்த அந்த நபர், நிர்மல் குமார் மோசடி கும்பலிடம் சிக்கி இருப்பதை உணர்ந்து அவரை தெளிவு நிலைக்கு கொண்டு வந்தார். அதன் பின்னர் இது பற்றி நிர்மல் குமார் திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆன்லைன் மோசடி கும்பல் நிர்மல் குமாரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்