Skip to main content

மின்கம்பத்தில் பணிபுரிந்த இருவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம்! கடலூரில் பரபரப்பு! 

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

Two people working on a power pole were injured in an electric shock

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கும் மற்றும் அகற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 

 

இந்நிலையில், விருத்தாச்சலம் பெரியார் நகர் பேருந்து நிலையம் அருகே ஒப்பந்த அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப் பணிக்காக மின் கம்பத்தில் ஏறி, பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த கங்காதுரை, அஜித் என இரண்டு இளைஞர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் செல்லும் மின்னழுத்த மின் கம்பியில் உரசியதால் இரு இளைஞர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து மார்பு, கை கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. திடீரென மின்சாரம் பாய்ந்ததால், பயத்தில் மின் கம்பத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்தார். மற்றொரு இளைஞர் உயிர் பயத்துடன் மின்கம்பத்தை கட்டி பிடித்தவாறு அலறிக் துடித்துக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

 

தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், மின்சாரம் செல்லும் உயர்மின் பாதையை நிறுத்திவிட்டு, சுமார் அரைமணி நேர போராட்டத்திற்குப் பின்பு இளைஞரை பத்திரமாக மீட்டனர். பின்னர் உடலில் தீக்காயங்களுடன் இருந்த இரண்டு இளைஞர்களையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த மின்சார வாரிய அதிகாரிகள், உரிய அனுமதி பெறாமல், உயர் மின் அழுத்தம் செல்லும்  மின்கம்பத்தில்  எவ்வாறு பணியில் ஈடுபட்டீர்கள் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்றும், ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தததில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்