Skip to main content

வீட்டின் மீது நாட்டு வெடி வீச்சு; இருவர் கைது ஒருவர் தலைமறைவு

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Two people arrested, one is absconding for case

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சந்திரன். இவரது மனைவி இனியவள். இவர்களுக்கு குகன் என்ற மகனும், ஆர்த்தி மற்றும் பிரீத்தி என்ற 2 மகள்களும் உள்ளனர். ரயில்வே ஊழியர் சந்திரன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவருடைய பணியை மகன் குகனுக்கு வழங்கப்பட்டு அவர் சேலம் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்.

 

இந்நிலையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் இனியவள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவில் திடீரென இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது, கம்பி சுற்றப்பட்ட நாட்டு வெடி வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், மின் விளக்குகள் மற்றும் கதவு உடைந்து சேதமானது. உடனடியாக சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நெருப்பு மற்றும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் அங்கு விரைந்து வந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார், ஆய்வாளர் பழனி ஆகியோர் தலைமையிலான போலீசார், விசாரணை மேற்கொண்டு அங்கு சிதறிக் கிடந்த வெடி துகள்கள், கம்பி ஆகியவற்றைக் கைப்பற்றி வெடியை வீசிச் சென்ற மர்ம நபர்கள் யார்? காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

மேலும் வெடி வீசிச் சென்ற நபர்களைப் பிடிக்க வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ், பாலாஜி ஆகியோரைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ரங்கராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர்களிடம், வெடி வீசச் சென்றபோது பயன்படுத்திய 1 இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

 

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை வானகரம் பகுதியில் வசித்து வரும் இனியவளின் மருமகன் ஜெகதீஷ் சென்னையைச் சேர்ந்த சுப்புராஜ், பாலாஜி, ரங்கராஜ் ஆகியோரிடம் கடனாக ரூ. 1 கோடி பெற்றுக்கொண்டு ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கியவர்களிடம் பணம் திருப்பிக் கொடுக்க முடியாததால், ஜெகதீஷ் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். வாணியம்பாடி மாமியார் வீட்டில் இருப்பார் என நினைத்து சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் ஜெகதீஷ் என்பவரின் மாமியார் இனியவள் வீட்டின் மீது நாட்டு வெடி வீசிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக 2 பேரைக் கைது செய்துள்ள வாணியம்பாடி கிராமிய போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொரு நபர் சென்னையைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரைத் தேடி வருகின்றனர்.

 

இதுமட்டும் தான் காரணமா வேறு காரணங்கள் உள்ளதா? இந்த மோசடியில் ஜெகதீஷ் மட்டும் ஈடுபட்டாரா அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் ஈடுபட்டார்களா? இவ்வளவு பெரிய தொகையை இவரை நம்பி எப்படி தந்தார்கள் எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்