Skip to main content

தடுப்பணை உடைப்பு விவகாரத்தில் மேலும் இரு அதிகாரிகள் தற்காலிகப் பணி நீக்கம்...

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

Two officers suspended ...

 

விழுப்புரம் - கடலூர் மாவட்டம் இடையே தென்பெண்ணையாற்றில் தாளவனூர் ஏனாதிமங்கலம் இடையே 25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை, கடந்த 23ஆம் தேதி உடைந்தது. தரமில்லாமல் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்ததைக் கண்டித்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மாவட்டச் செயலாளர் புகழேந்தி, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ மற்றும் திமுகவினர், விவசாயிகள் ஆகியோர் அணை உடைந்த பகுதியில் பெரும் போராட்டம் நடத்தினர்.

 

இதையடுத்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவகர், உதவிப் பொறியாளர் சுமதி ஆகிய 4 பேரை கடந்த 25ஆம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

 

இதைத் தொடர்ந்து உதவிப் பொறியாளர்கள் தனசேகர், ஜெகதீசன் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுவரை இந்தத் தடுப்பு அணை உடைந்த விவகாரத்தில் 6 பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 2 பேர் உயிரிழப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
manipur Churachandpur District sp office incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் என்பவர் கடந்த 14 ஆம் தேதி ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சியாம் லால் பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து குக்கி சமூகத்தினர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடினர்.

அப்போது கூட்டத்தை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சட்டசபையில் தொடர் அமளி; 6 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
6 BJP MLAs suspended Continuity in Assembly at west bengal

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல், தங்களது நிலத்தை பலவந்தமாக கைப்பற்றியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அந்த பகுதியில் வாழும் பெண்கள் குற்றம் சாட்டினர். 

மேலும், ஷேக் ஷாஜகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமான பெண்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஊழல் செய்ததாக ஷேக் ஷாஜகான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தச் சென்றனர். அப்போது, அமலாக்கத்துறை அதிகாரிகளை ஒர் மர்ம கும்பல் தாக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஷேக் ஷாஜகான் தலைமறைவாகி உள்ளார் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மேற்கு வங்க மாநில சட்டசபை இன்று (12-02-24) கூடியது. இதையடுத்து, சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, ஷாஜகானை கைது செய்ய் வேண்டும் என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சோபந்தேப் சட்டர்ஜி, அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர முன்மொழிந்தார். இதற்கு அனுமதி அளித்த சபாநாயகர் பிமன் பானர்ஜி, அமளியில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 6 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.