Skip to main content

“அவிங்க வந்துட்டா அப்பறம் உங்கள சேர்க்கமாட்டங்க” - சாதிய ரீதியில் மாணவனிடம் ஆசிரியை  பேசும் ஆடியோ! 

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

Tuticorin Kolathur government school teacher audio

 

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, சாதிய ரீதியில் அப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அந்த ஆடியோவில், “ உன் பேர் என்ன” என்ற துணைத் தலைமை ஆசிரியர் கேட்க, மாணவன் தனது பெயரைக் குறிப்பிடுகிறார். அடுத்த கேள்வியாக அந்த மாணவனின் சமூகத்தைக் குறிப்பிட்டு மாணவனிடம் உறுதி படுத்திக்கொள்கிறார். அதன் பிறகு அந்த மாணவனிடம், “நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும் செய்வியா” என கேட்கும்போது, “என்ன டீச்சர் சொல்லுங்க..” என்கிறார் மாணவர். அதன்பிறகு, பள்ளியில் உள்ள வேற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களின் பெயரை குறிப்பிட்டு, “அவர்களை உங்களுக்கு பிடிக்குமா” என கேட்கிறார். அதற்கு மாணவன், “எல்லாத்தையும் பிடிக்கும்” என்கிறார். மாணவனின் பதிலைக் கேட்டு ஒரு சில நொடிகள் யோசிக்கும் ஆசிரியை, “எல்லாத்தையும் பிடிக்கும்னு சொல்லும் நீ, எப்படி எனக்கு உதவி செய்ய முடியும். அந்த ஆசிரியர்களை உங்க அப்பாவுக்கு பிடிக்குமா” என்று தொடர்ந்து பேசிவிட்டு, குறிப்பிட்ட அந்த ஆசிரியர்கள், “உங்க ஊர் பயங்கள சேர்க்கக் கூடாதுனு, அவங்க சொல்லுவாங்க அதான் கேட்டேன்” என்கிறார். 

 

பிறகு அந்த ஆசிரியை தனது சமூக அடையாளத்தையும், பேசும் மாணவனின் சமூகத்தையும் குறிப்பிட்டுவிட்டு, அந்த இரண்டு ஆசிரியர்களின் சமூகம் என்னவென்று மாணவனிடம் கேட்க, அவர் ஆசிரியர்களின் சமூகத்தைக் குறித்து தெரிவிக்கிறார். அதன் பிறகு மாணவன், “எல்லோரும் சமம் தானே டீச்சர்” என்றதும், “இப்போ பெற்றோர் கழக தலைவர் தேர்தல் வர போகுது. அதில் உங்க ஊர்காரர்களிடம் சொல்லி யாரையாவது நிற்க சொல்லு. அவிங்க வந்துட்டா அப்பறம் உங்க பயளுகள சேர்க்கமாட்டாங்க” என்று பேசுகிறார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த ஆடியோ குறித்துச் சம்மந்தப்பட்ட மாணவனிடம் நாம் கேட்டபோது, “ஆம் நான் தான் அந்த ஆடியோவில் பேசியிருப்பது. அது உண்மைதான்” என்றார். 

 

ஆசிரியை தொலைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்ட போது தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்