Skip to main content

மதுபாட்டில்களை ஏற்றி சென்ற மினி லாரி விபத்து! ஓட்டுநரைக் காப்பாற்றாமல் பாட்டில்களை அள்ளிச் சென்ற மக்கள்!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

truck carrying liquor met with an accident and people taking away the liquor bottles

 

வேடசந்தூர் அருகே டயர் வெடித்து, நடுரோட்டில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த மதுபாட்டில்களை குடிமகன்கள் அள்ளிச் சென்றனர்.

 

திண்டுக்கல், தாமரைபாடியிலுள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து வேடசந்தூர் அருகே உள்ள கூத்தம்பட்டி, எரியோடு, தென்னம்பட்டி ஆகிய மதுபான கடைகளுக்கு மினி லாரி ஒன்றில் மது பாட்டில்கள் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டது. திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே உள்ள விட்டல் நாயக்கம்பட்டி என்னுமிடத்தில் மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்தது இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

மினிலாரியில் அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் சாலையில் விழுந்து நொறுங்கின. சில பெட்டிகளில் மதுபாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்துவிட்டு மதுபாட்டில்களை அள்ளிச் செல்ல தொடங்கினர். இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலுள்ள பலர் வாகனங்களில் வந்து அங்கு சிதறிக்கிடந்த மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

 

truck carrying liquor met with an accident and people taking away the liquor bottles

 

அதே நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த ஓட்டுநர் பரமசிவம், தொழிலாளர்கள் விஜயன், குமரேசன் ஆகிய 3 பேரையும் மீட்க யாரும் முன்வரவில்லை. விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு திரண்டிருந்த மக்களை விரட்டி அடித்த  பின்னர், விபத்தில் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் இருந்தன. மக்கள் மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்