Skip to main content

பொங்கல் பேருந்து சேவை; போலீஸ் கமிஷனர் அறிவுரை

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

trichy city police commissioner  advised for bus drivers

 

தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவதையொட்டி போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் திருச்சி மாநகரில் இரண்டு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மன்னார்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை - சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட உள்ளன. அந்த தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்யபிரியா இன்று காலை திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காவல்துறை ஆணையர் சத்யபிரியா கூறுகையில், "பொங்கல் பண்டிகையையொட்டி சுமார் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது இந்த புதிய வழித்தடத்தில் இருந்து புறப்படக்கூடிய பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளபடி பேருந்துகளை நிதானமாக இயக்க வேண்டும். பேருந்து ஓட்டுநர்கள் போதுமான ஓய்வுக்குப் பின்னர் பேருந்துகளை இயக்க வேண்டும். தற்போது மாநகர பகுதிகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் காவல்துறையினர் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் விபத்துகள் கட்டுப்படுத்தப்படும்" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.