Skip to main content

விளையாட்டு வினையானது; உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவன் 

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

trichy balasamudram government school tenth std student incident 

 

தொட்டியம் அருகே பால சமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் கோபி என்பவரின் மகன் மௌலீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கி போட்டு விளையாடியதாகத் தெரிகிறது. இதில் சக மாணவர்கள் மௌலீஸ்வரன் கற்களை தூக்கி வீசியதாகத் தவறாக எண்ணி மாணவன் மெளலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

 

இதில் மாணவன் மௌலீஸ்வரன் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மெளலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த மெளலீஸ்வரனின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மூன்று மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.