கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. தற்போது தக்காளி வெளி சந்தைகளில் 120 முதல் 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அரசு தரப்பில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏற்கனவே அரசு சார்பில் தக்காளியை கூடுதலாக கொள்முதல் செய்து 62 பண்ணை பசுமை கடைகள் மூலம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்தும், அதனை நிறைவேற்றுவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முதல் கட்டமாக வட சென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னையில் 25 கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகளிலும் ஆக 82 கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று முதல் சென்னையில் உள்ள 82 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த நியாய விலைக் கடைகளில் தக்காளி வாங்கும் பொதுமக்களுக்கு குடும்ப அட்டையை காண்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எந்த கட்டுப்பாடும் தமிழக அரசு சார்பில் விதிக்கப்படவில்லை என்ற தகவலும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.