Skip to main content

ஆவண எழுத்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பதிவுத்துறை தலைவர் 

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

tn registration ig circular about document writer

 

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறுகள் எற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதையடுத்து இது போன்ற குற்றச்சாட்டுகளைத் தடுக்க பதிவுத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதையடுத்து பதிவுத்துறை தலைவர், சார்பதிவாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், “சார்பதிவாளர்கள் ஆவண எழுத்தர்களை அழைத்தால் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும்.  மற்றபடி ஆவண எழுத்தர்கள்  பதிவு அலுவலகத்தில் நுழையக்கூடாது. இந்த உத்தரவை சார்பதிவாளர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதனை மீறி சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் செயல்பாடோ, நடமாட்டமோ கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும் இது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தால் ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். இது போன்ற சம்பவங்களைக் கண்காணிக்கத் தவறும் சார்பதிவாளர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை ஆவணம் எழுத்தர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை சார்பதிவாளர்கள் உறுதி செய்யவேண்டும். மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை மண்டல தலைவர்கள் தங்களது திடீர் ஆய்வுகளின் போது இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்திட வேண்டும். இந்த சுற்றறிக்கையை ஆவண எழுத்தர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Rules of Conduct for Elections; Election Commission action order

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூத்த முதன்மைச் செயலர் நரேந்திர என் புடோலியா, மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “விமான நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே பாலங்கள், சாலைகள், அரசுப் பேருந்துகள், மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடம் போன்ற பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் உள்ள அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள், சுவர் எழுத்துகள், சுவரொட்டிகள், காகிதங்கள் அல்லது கட்அவுட்கள், பேனர், கொடிகள் போன்ற அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற உத்தரவிடப்படுகிறது.

நாடு முழுவதும் இன்னும் பல இடங்களில் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆணையத்திற்குப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கவனித்து வருகிறது. இதன் மூலம் அனைத்து அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களையும் உடனடியாக அகற்றி அதன் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையை நாளை (21.03.2024) அன்று மாலை 5:00 மணி வரை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கையும் களவுமாக சிக்கிய சார் பதிவாளர்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
The sub registrar was caught Anti-bribery department in action

திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோபால கிருஷ்ணன் (வயது 65). இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் இருந்த காலி மனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பதாக இன்று (01.03.2024) திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளார்கள். இது தொடர்பாக கோபால கிருஷ்ணன் கடந்த 27 ஆம் தேதி (27.02.2024) திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று சார்பதிவாளர் சபரி ராஜன் (வயது 41) என்பவரை அணுகி பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக கேட்டுள்ளார்.

அதற்கு திருவெறும்பூர் சார் பதிவாளர் சபரி ராஜன் ஒரு பத்திரத்திற்கு பத்தாயிரம் வீதம் இரண்டு பத்திரத்திற்கு 20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபால கிருஷ்ணன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் இன்று மாலை 5 மணியளவில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் கோபால கிருஷ்ணன் வசம் இருந்து சார்பதிவாளர் சபரி ராஜன் தனிநபர் சூர்யா (வயது 24) என்பவரின் மூலம் லஞ்ச பணத்தை பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.