Skip to main content

‘கிளாம்பாக்கத்தில் உயர்மட்ட மேம்பாலம்’ - தமிழக அரசு தகவல்!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
TN govt says High level flyover in Kilaampakkam

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து இந்தப் புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்தப் பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. இதனையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எதிரே உள்ள ஜிஎஸ்டி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி வண்டலூர் முதல் காட்டாங்குளத்தூர் வரை முதற்கட்டமாக உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. தேவையற்ற காலவிரயம் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இந்த ஆண்டே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும்  எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்