Skip to main content

“விளையாட்டு என்பதை இயக்கமாகவே தமிழக அரசு மாற்றி வருகிறது” - அமைச்சர் உதயநிதி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
TN govt is changing sports into movement says Minister says Udayanidhi stalin

6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் - 2023 கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த் விழாவானது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். 13 நாட்களாக தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 நேற்று (31.01.2024) நிறைவடைந்தது.

இதனையடுத்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (31.01.2024) நடைபெற்ற நிறைவு நாள் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் முன்னிலையில் ஒட்டுமொத்த தொடரில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிரா, இரண்டாமிடம் பிடித்த தமிழ்நாடு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாடு விளையாட்டுத்துறையின் வரலாற்றில் எத்தனையோ தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்றிருந்தாலும், அதில் பங்கேற்றிருந்தாலும் பதக்கப் பட்டியலில் இந்த முறைதான் தமிழ்நாடு முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக திராவிட மாடல் தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு எடுத்த நடவடிக்கைகள்தான் இதற்கு ஒரே காரணம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஏழை, எளிய கிராமப்புற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலரை அடையாளம் காண்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. அந்த திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கான அந்த பயிற்சியை அரசு கொடுத்தது. அதன் விளைவாகத்தான் தமிழ்நாடு இன்று 2 வது இடத்திற்கு வந்திருக்கிறது.

TN govt is changing sports into movement says Minister says Udayanidhi stalin

விளையாட்டு என்பதை ஒரு இயக்கமாகவே தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக விளையாட்டு துறையின் சாதனையாளர்கள் நகரத்தில் இருந்து மட்டும் அல்ல கிராமத்தில் இருந்தும் வரவேண்டும். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டும் அல்ல எல்லோரும் வர வேண்டும், விளையாட்டில் வெல்ல வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் எண்ணம். அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் அரசு துவக்க இருக்கிறது.

திருச்சியில் வரும் 7 ஆம் தேதி இந்த திட்டத்தை துவக்கி வைக்கின்றேன். எப்படி படிப்பதற்கு புத்தகங்களை அரசு கொடுக்கின்றதோ, அதேபோல விளையாட்டு போட்டிகளில் இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்று விளையாட்டு உபகரணங்களையும் கொடுக்க இருக்கின்றோம். அதுவும் விளையாட்டை எப்போதும் நேசித்த கலைஞருடைய நூற்றாண்டில் கலைஞரின் பெயரிலேயே கொடுக்க உள்ளோம். வெற்றியாளர்களுக்கு பதக்கமும், விருதுகளும் ஒரு அங்கீகாரம் என்றால் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு இந்த அனுபவம் தான் பதக்கம். எனவே உங்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கான களம் அப்படியேதான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, இ.பரந்தாமன், ஜே.ஜே.எபினேசர், ஜோசப் சாமுவேல், ஐட்ரீம் இரா.மூர்த்தி, முத்துராஜா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற ஸ்கேட்டிங் வீராங்கனை ஆர்த்தி கஸ்தூரி ராவ், மத்திய அரசின் விளையாட்டு செயலாளர் சுஜாதா சதுர்வேதி, இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சென்னை மாநகராட்சியின் துணை மேயர் எம்.மகேஷ்குமார் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்