Skip to main content

'ஒரே மேடையில் விசிக-தவெக';திருமாவளவன் பரபரப்பு பேட்டி

Published on 05/11/2024 | Edited on 05/11/2024
'Vck-tvk on one stage'-explanation given by Thirumavalavan

தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார்.விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினம் அன்று விசிக தலைவர் திருமாவளவன் எழுதியுள்ள புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே நாங்கள் 7 ஆண்டுகளாக தொடர்ந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வெற்றிகரமாக இயங்கி வருகிறோம். அதேபோல் அகில இந்திய அளவில் 'இந்தியா' கூட்டணியிலும் ஒரு அங்கமாக இருக்கிறோம். இந்த இரண்டு கூட்டணிகளையும் உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகளுக்கும் பங்கு உண்டு. எனவே நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் மேலும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தான் எங்களுடைய கவனம் இருக்கிறது.

'Vck-tvk on one stage'-explanation given by Thirumavalavan

இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை எங்களுக்கு இல்லை என ஏற்கனவே பலமுறை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். வேண்டுமென்றே  திட்டமிட்டு விடுதலைச் சிறுத்தைகள் மீது சந்தேகத்தை எழுப்புகின்ற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை. நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இந்த கூட்டணியை சிதறடிக்கும் வேண்டிய தேவை விசிகவுக்கு இல்லை. யாரோ எவரோ போகின்ற போக்கில் ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி விசிக மீது சந்தேகத்தை எழுப்புவது ஏற்புடையதல்ல. அதை 100% எதிர்க்கிறேன்.

2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக திமுக தலைமையிலான கூட்டணியில் தான் இடம்பெறும், இதில் கேள்விகளுக்கு இடமில்லை. இனி இப்படி ஒரு கேள்வியை யாரும் எழுப்ப வேண்டாம். நான் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க இசைவு தெரிவித்து ஓராண்டாகிறது. கிட்டத்தட்ட ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கருடைய பிறந்த நாளில் இந்த புத்தகம் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் வெளியிடுவார் என்று சொல்லி இருந்தார்கள். அவர் மட்டுமல்ல ராகுல் காந்தியும் அழைப்பதாக திட்டமிட்டு இருக்கிறோம் என்று கூறியிருந்தார்கள்.  40 பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற பெயரில் தொகுப்பாக வெளிவருகிறது. ஆகவே இந்த புத்தக வெளியீட்டு விழா இப்பொழுது முடிவானது அல்ல. இப்பொழுது ஒரு சில வாரங்களுக்கு முன்பு தவெக மாநாடு  நடைபெறுவதற்கு முன்பு விஜய் அவர்களை அழைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அவர் வருவார் என்று தகவல் சொன்னார்கள். ரஜினிகாந்த் கூட அதில் பங்கிற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னார்கள். இப்படித்தான் சொல்லப்பட்டது. நாங்களும் அதற்கு இசை தெரிவித்திருந்தோம். இப்பொழுது விஜய் பங்கேற்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு நாங்கள் முடிவு செய்வோம். முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்து பேசி முடிவு செய்வோம்'' என்றார்.

சார்ந்த செய்திகள்