தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பணப்படுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, வாகன சோதனையில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவ படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று (04/04/2021) முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, புதுச்சேரி முழுவதும் ஏப்ரல் 7- ஆம் தேதி அன்று காலை வரை மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று (03/04/2021) ஒரேநாளில் ரூபாய் 160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிந்து வரும் ஏப்ரல் 7- ஆம் தேதி அன்று மதியம் 12.00 மணிக்கு மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.