திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் பெரியபேட்டை பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நகராட்சி பணியாளர்கள் தடுப்புகள் அமைத்தும், கிருமிநாசினி தெளித்தும் வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறை சார்பில் கரோனா பரிசோதனை நடமாடும் வாகனத்தைக் கொண்டு, அப்பகுதி மக்களுக்கு நோய்த் தொற்று குறித்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் மருத்துவ, வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் பெரியபேட்டை பகுதியில் நடக்கும் நோய்த் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், "வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் 8 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதால் அப்பகுதி 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களால் தான் இந்த மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவுகிறது. இ- பாஸ் இல்லாமல் வருபவர்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களைத் தாலுக்கா மருத்துவமனைகளில் சிறப்பான முறையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றோம், கிராம மக்களிடைய கரோனா நோய் குறித்து நல்ல விழிப்புணர்வு உள்ளது" என்றார்.