Skip to main content

தமிழக கேரள எல்லையில் புலி நடமாட்டம்; பசுவை அடித்துத் தூக்கிச்சென்று ஆற்றில் வீசிய கொடூரம்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

Tiger movement in Tamil Nadu Kerala border

 

கோடை வெயில் தகிக்கத் தொடங்கிவிட்டது. வஞ்சகமில்லாமல் சென்சுரியையும் தாண்டிய அனல் கொதிக்கிறது. இதற்கு மலை வனப்பகுதிகளும் விதிவிலக்கல்ல. உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் வனவிலங்குகள் தரையிறங்கிக் கொண்டிருக்கின்றன.

 

இந்நிலையில் தான் அந்தப் பயங்கரம். தென்காசி மாவட்டத்தின் புளியரையை ஒட்டிய பகுதியில் கேரள எல்லை துவங்குகிறது. எல்லைப்புறம் தாண்டிய கேரளாவின் ஆரியங்காவு நகரின் அரேக்கர் மலைவனப்பகுதியைச் சேர்ந்தவர் தங்கையா. தனது வீட்டின் தொழுவத்தில் மூன்று பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்புறமுள்ள தொழுவத்தில் மூன்று பசுக்களையும் கட்டி வைத்திருந்தார்.

 

நேற்று அதிகாலை 3 மணியளவில் தொழுவத்தின் மாடுகள் கலைச்சலில் கத்துகிற சத்தம் கேட்கவே அதனை யாரும் கவனிக்கவில்லையாம். காலையில் தங்கையா வழக்கம் போல் எழுந்து தொழுவத்தைப் பார்த்த போது இரண்டு பசுக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கிடந்தது கண்டு பதைபதைத்துப் போனார். மற்றொரு மாட்டை காணவில்லை. அந்த மாட்டை புலி தாக்கிக் கொன்று இழுத்துச் சென்றது அந்தப் பகுதியின் சி.சி.டிவி. காமிராவில் பதிவாகியது தெரியவந்திருக்கிறது. மேலும் அந்த மாட்டை அருகிலுள்ள ஆற்றுப்படுகையில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறது. தங்கையா இது குறித்து வனத்துறையினருக்குத் தெரிவிக்க, புரபேஷனரி ரேஞ்ச் ஆபீசர் விபின் சந்திரன், கடமான்பாறை துணை ரேஞ்சர் ஸ்ரீஜித், முதுநிலை வன அலுவலர் ஜஸ்டின் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அத்துடன் சம்பவ இடம் வந்த கிராம பஞ்சாயத்து தலைவரான சுஜா தாமசும் பார்வையிட்டு சூழலைக் கண்டறிந்திருக்கிறார். புலியின் நடமாட்டம் என்பதால் கேரள சிறப்பு வனக்குழுவினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

 

தற்போது கோடை வெயில் துவங்கி விட்டது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வனவிலங்குகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைந்திருக்கலாம். இப்பகுதியில் புலி நடமாடுவதால் தேசிய புலிகள் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள். மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புலி நுழைந்து 2 பசுக்களைக் கொடூரமாகத் தாக்கியதுடன் ஒரு பசுமாட்டை அடித்துக் கொன்றதால் அச்சத்திலும் பீதியிலும் உறைந்து போயிருக்கிறார்கள் ஆரியங்காவு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியினர்.

 

 

சார்ந்த செய்திகள்