Skip to main content

புலி உயிரிழப்பு; கண்ணி வைத்த சிறுவன் உட்பட 7 பேர் அதிரடி கைது

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

Tiger after getting caught in short wire; 7 people, including a boy, were arrested

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை, மான், யானை, புலி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா செல்லும் வழியில் கொத்தமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொமரத்தூர் வனப்பகுதியில் உள்ள ஒரு ஓடையில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வனப்பகுதியில் புலியின் உடல் எரியூட்டப்பட்டது.

 

இந்நிலையில் உடற்கூறு ஆய்வு முடிவில் வனப்பகுதியில் மான்கள் மற்றும் பன்றிகளை வேட்டையாட வைத்துள்ள இரும்பு கம்பியால் செய்யப்பட்ட கண்ணியில் புலி சிக்கியதால் கடந்த 10 நாட்களாக அதிலிருந்து வெளியே தப்பிக்க முடியாமலும், உணவில்லாமலும் புலி இறந்தது தெரியவந்தது.

 

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் பல இடங்களில் இரும்பு வளையங்களால் ஆன கண்ணிகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சுசில் குட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ், நாச்சிமுத்து, பத்மகுமார், லோகேஷ் பால், தினகரன், சௌந்தர்ராஜன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வனப்பகுதிகளில் பன்றிகள் மற்றும் மான்களை வேட்டையாட அவ்வப்போது இரும்பு கம்பியால் ஆன சுருக்குக் கண்ணிகளை வைத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்கள் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்