Skip to main content

கரோனா நெருக்கடியில் தனிநபர் கடன்... போலி கால் சென்டர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020
 Three persons arrested for fraudulent use of fake call centers

 

சென்னையில் தனிநபர் கடன் வாங்கி  தருவதாக மோசடியில் ஈடுபட்ட போலி கால் சென்டர் நடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

போலி கால் சென்டர் மூலமாக மோசடியில் ஈடுபடுவதாக, பல்வேறு குற்றச்சாட்டுகள் சென்னை மத்திய குற்றப்பிரிவின்  வங்கி மோசடி தடுப்பு பிரிவுக்கு புகார்களாக வந்த நிலையில், இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணையில் இறங்கிய தனிப்படையினர் பெருங்குடி மற்றும் திருவான்மியூரில் போலியாக கால் சென்டர்களை நடத்திவந்த சேலத்தை சேர்ந்த தியாகராஜன், விழுப்புரத்தை சேர்ந்த மணி பாலா, சைதாப்பேட்டையைச் சேர்ந்த கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட நபர்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, எங்களிடம் இன்சூரன்ஸ் எடுத்தால் தனிநபர் கடன் பெற்று தருவோம் என நம்பவைத்து, இன்சூரன்ஸ் எடுக்க முன்பணத்தை செலுத்தவேண்டும் எனக்கூறி பணத்தை பெற்றுக்கொண்டு, கடன் பெற்று தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட தியாகராஜன் இதற்கு முன்பு சென்னையில் மிகப்பெரிய அளவில் போலி கால் சென்டர் ஒன்றை நடத்தி கைது செய்யப்பட்டு, வெளியில் வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

 

இதோடு இல்லாமல் 2020-ல் மட்டும் இதுபோல் போலி கால் சென்டர்கள் மூலமாக மத்திய குற்ற பிரிவுக்கு 365 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதுவரை இது தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கரோனா காலத்தில் பொருளாதரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், கரோனா பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி தனிநபர் கடன் பெற்று தருவதாக இதுவரை, ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் போலி கால் சென்டர்கள் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்