Skip to main content

45 நாட்களில் மூன்று மாடி மருத்துவமனை... சாதனை பட்டம்பெற்ற அமைச்சரின் உழைப்பு!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

Three storey hospital in 45 days ... The work of the minister who got the award

 

தமிழ்நாட்டில் புதிதாக திமுக அரசு பொறப்பேற்று பல்வேறு செயல்பாடுகளில் வரலாற்றுச் சாதனை படைத்துவருகிறது. அதில் ஒன்றுதான் ஈரோடு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுர அடி ஏறக்குறைய 70 ஆயிரம் சதுர பரப்பளவில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடத்திற்கு ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாதனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சென்ற வருடம் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

 

அதன்படி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முற்றிலும் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் சென்ற அதிமுக ஆட்சியில் மருத்துவமனையை விரிவுபடுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தால் பற்றாக்குறை ஏற்பட்டது. நோயாளிகள் சிகிச்சைக்கு வேறு வழியின்றி கடுமையாக சிரமப்பட்டனர். இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் புதிதாக அமைச்சர் பொறுப்பேற்ற வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துச்சாமி, கரோனா இரண்டாவது அலையில் பொதுமக்கள் அதிக பாதிப்புக்குள்ளாவதும் அதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடுவதும் போதிய அளவு ஆக்ஸிஜன் படுக்கை வசதி இல்லாததையும், அமைச்சரான அடுத்த நாளே பெருந்துறை மருத்துவக் கல்லூரி சென்று களத்தில் இறங்கி ஆய்வுசெய்த அமைச்சர் சு. முத்துச்சாமி பல்வேறு தற்காலிக ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் செய்தார்.

 

Three storey hospital in 45 days ... The work of the minister who got the award

 

அதோடு நிற்காமல் புதிய மருத்துமனை கட்டடம் உடனடித் தேவை என முடிவு செய்து செயலில் இறங்கினார். ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள் தொழில் நிறுவனங்களை அழைத்துப் பேசினார். உடனே அந்த நிறுவனங்கள் உதவ வந்தன. அவர்களின் முழுமையான பங்களிப்புடன் ரூபாய் 14.5 கோடி ரூபாய் மதிப்பில் சென்ற மே மாதம்  18ஆம் தேதி 69 ஆயிரம் 200 சதுரடியில் மூன்று தளங்களுடன் 401 படுக்கைகள் கொண்ட கட்டடம் நவீன தொழில்நுட்ப முறையில் அதன் கட்டுமானப் பணி தொடங்கியது. 45 நாட்களுக்குள், ஜூலை 1ஆம்  தேதி, அவை முழுமையாக முடிக்கப்பட்டது. அதிநவீன பிரீ காஸ்ட் ஸ்லாப்ஸ் மூலமாக மருத்துவமனையைக் கட்டியதற்கும், அதிக எண்ணிக்கையிலான படுக்கை வசதிகள் அமைத்ததற்கும், மேலும் கரோனா பேரிடர் காலத்தில் தன்னலம் நோக்காமல் பொது நலனிற்காக இப்பணியை மேற்கொண்டுதற்காக உலக அளவில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட், ஆசிய கண்ட அளவில் ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டு, இந்திய அளவில் இந்தியன் ரெக்கார்டு அகாடமி மற்றும் தமிழ்நாடு அளவில் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அவர்கள் சார்பாக சாதனைக்கான சான்றிதழை நேற்று (07.07.2021) வழங்கினார்கள்.

 

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் சாதனை விருதுகளை வழங்கிய நிறுவனத்தினரும் கலந்துகொண்டனர். இதுகுறித்து ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் சகாதேவன் கூறுகையில், “கரோனா மூன்றாம் அலை வரும் என உலக சுகாதார நிறுவனமும் இந்திய மருத்துவர்களும் கூறிவருகின்றனர். அவ்வாறு வரும்போது இந்த மருத்துவமனை கரோனா சிகிச்சைக்காக முழுவதும் பயன்படுத்தப்படும். கரோனா தொற்று முழுவதும் முடிந்தவுடன் இந்த மருத்துவமனை ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் மருத்துவமனையாக மாற்றப்பட்டு, அனைத்து வகை நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வசதி செய்யப்படும்” என்றார். மூன்றடுக்கு பிரம்மாண்ட கட்டட பணியை உடனிருந்து கவனமாகப் பார்வையிட்டு அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களை ஊக்குவித்து விரைவாக கட்டி முடித்து அதை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கி சாதனைப் பட்டம் பெற்றுள்ளார் சீனியர் அமைச்சரான சு. முத்துச்சாமி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.