Skip to main content

காவல்துறை என்கவுன்ட்டரில் தொடர் குற்றவாளி சுட்டுக்கொலை!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

காவல்துறையினரின் என்கவுன்ட்டரில் தொடர் குற்றவாளி துரைமுருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். 

 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டைப் பக்கம் உள்ள கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் துரைமுருகன். ஆரம்பத்தில் களவுகளில் ஈடுபட்டவர் பின் ரவுடியாக வளர்ந்திருக்கிறார். அவ்வப்போது ஆட்களைச் சேர்த்துக் கொள்வார். கேங்காக செயல்பட்டதுமில்லை. 2001- ன் போதே தொழிலில் ஈடுபட்டவர். தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், கேட்டது கிடைக்காவிட்டால் என்றாலும் திடீரென அரிவாளைத் தூக்குவார் என்கிறார்கள்.

 

தூத்துக்குடியின் ராஜீவ் நகர்ப் பகுதிகளிலும் இவரது நடமாட்டம் உண்டு. களவு வழிப்பறி கொள்ளை, கொலை உள்ளிட்ட 20 வழக்குகள் இவர் மீது உள்ளன. இவைகளில் தூத்துக்குடியின் தென்பாகம் காவல் நிலையத்தில் மூன்று கொலை வழக்குகள் உள்ளிட்ட துரைமுருகன் மீதான 8 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த அக்டோபர்12- ஆம் தேதி அன்று நெல்லையின் டக்கரம்மாள்புரத்தில் தகவலின் பேரில் கொன்று புதைக்கப்பட்ட வாலிபர் ஒருவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. விசாரணையில், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்று தெரிய வந்திருக்கிறது. அவரைக் கடத்திக் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில் துரைமுருகனும் குற்றவாளிகளில் மெயின் குற்றவாளியாம்.

 

அந்தக் கொலைச் சம்பவத்தில் ரவுடி துரைமுருகனை எஸ்.ஐ. ராஜபிரபு தலைமையிலான தனிப்படை தேடி வந்திருக்கின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு பகுதியில் துரைமுருகன் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்க எஸ்.ஐ. ராஜபிரபு உள்ளிட்ட தனிப்படை காவல்துறையினர் துரைமுருகனைச் சுற்றி வளைத்திருக்கின்றனர். அது சமயம், காவல்துறையினரைத் தாக்கிவிட்டு ரவுடி துரைமுருகன் தப்பி ஓடுகையில், காவல்துறையினர் சுடப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறான். 

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார் மற்றும் டி.எஸ்.பி. கணேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் பார்வையிட்டனர். எஸ்.பி. ஜெயக்குமார் விசாரணையும் நடத்தியிருக்கிறார். கைப்பற்ற துரைமுருகனின் உடல் உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரவுடி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்