Skip to main content

கண்ணீர் விட்டு கதறிய விவசாயி; லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்த வி.ஏ.ஓ! 

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Thiruvannamalai Polur VAO Bribe issue

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்காவுக்கு உட்பட்ட மண்டகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன். கடந்த 2023 அக்டோபர் மாதம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு சென்று இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் எனக்கேட்டு மனு தந்துள்ளார். அந்த மனுமீது விசாரணை நடத்த வட்டாட்சியர் மண்டகொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) இருளப்பனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் விசாரணை நடத்தி வீடு இல்லை எனச்சொல்லி அறிக்கை தந்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு 6.11.2023ஆம் தேதி அரசு அதிகாரிகள், கணேசன் மற்றும் அவரது மனைவி முனியம்மாள் பெயரில் தோராய பட்டா வழங்கியுள்ளனர்.

பட்டா வாங்கியதற்காக ஒரு பட்டாவுக்கு 40 ஆயிரம் என இரண்டு பட்டாவுக்கு 80 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் வி.ஏ.ஓ இருளப்பன். விவசாயியான கணேசன், என்னிடம் அவ்வளவு பணமில்லை. 20 ஆயிரம் ரூபாய் தருகிறேன் எனச் சொல்லியுள்ளார். 80 ஆயிரம் தந்தே ஆகவேண்டும் என்றுள்ளார் இருளப்பன். இது இழுபறியாகவே இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 30.1.2024 ஆம் தேதி கணேசன் தனது நிலத்தில் இரண்டு ஏக்கர் கரும்பு பயிர் வைத்துள்ளார். இதனை அடமானமாக வைத்து மண்டகொளத்தூர் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வாங்கவேண்டி அதற்காக நிலத்துக்கான அடங்கல் கேட்டு வி.ஏ.ஓ அலுவலகம் சென்றார். அங்கே கிராம நிர்வாக அலுவலர் இருளப்பன், 51 வயதான கணேசனை மரியாதை இல்லாமல் ஒருமையில் மிக கொச்சையாக பேசி திட்டியுள்ளார். “வீட்டுமனை பட்டா வாங்கி தந்த எனக்கு தரவேண்டிய பணத்தினை தராமல் இருக்கறவன்தானே நீ. உனக்கு அடங்கல் வேண்டும் என்றால் ஏற்கனவே நீ கொடுக்க வேண்டிய லஞ்சம் பணம் ரூபாய் 80 ஆயிரம் கொடுத்தால் தான் அடங்கல் தருவன் இல்லன்னா தரமுடியாது. உன்னால் என்ன செய்யமுடியுமோ செய். நான் நினைச்சாதான் இங்க உன் வேலை நடக்கும், இல்லன்னா ஒன்னும் நடக்காது வெளிய போய்யா” என மிரட்டியுள்ளார்.

என்னால் அவ்வளவு பணம் தர இயலாது என கணேசன் கண்ணீர் விட்டு அழுதபின், “இப்போ 40 ஆயிரம் ரூபாய் தந்துட்டு அடங்கல் வாங்கிக்கிட்டு போ. மீதி பணம் பிறகு கொடு” என்று சொல்லி அனுப்பியுள்ளார். இவரும் சரியெனச்சொல்லிவிட்டு வந்துள்ளார்.

தன்னை அவமானப்படுத்தி அழவைத்தவரை விடக்கூடாது என முடிவு செய்தவர் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வேல்முருகனை சந்தித்து புகார் தந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து ரசாயனம் தடவிய 40 ஆயிரம் ரூபாய் தந்து அனுப்பினர். அந்த பணத்தோடு பிப்ரவரி 3ஆம் தேதி மாலை வி.ஏ.ஓ.வின் செல்போனுக்கு தொடர்புகொண்டு பணம் ரெடி செய்துவிட்டேன் என்றுள்ளார் கணேசன். “பணத்தை எடுத்துக்கிட்டு போளூர் தாலுக்கா அலுவலகத்துக்கு வந்துடு அங்கதான் இருக்கேன்” என்றுள்ளார் இருளப்பன்.

அங்கே சென்று பணம் கொடுத்ததும் அதனை வாங்கி எண்ணி இருளப்பன் தன் பாக்கெட்டில் வைத்ததும், அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், இருளப்பனை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.