Skip to main content

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்; சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Thiruvannamalai Pelarnami Krivalam; Special buses run

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டலம் சார்பில் இன்று (24.01.2024) மற்றும் நாளை (25.01.2024) என இரு நாட்கள் சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், பண்ருட்டி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ஆரணி மற்றும் ஆற்காடு காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு மக்கள் சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பாக இந்த நாட்களில் கூடுதலாக 350 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த விடுமுறை நாட்களை முடித்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக 28.01.2024 மற்றும் 29.01.2024 ஆகிய தேதிகளில் 250 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மேலும், பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர் என விழுப்புரம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 580 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார். 

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது.