Skip to main content

திண்டுக்கல்லில் 19 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திருவள்ளூர் சிலை!குமுறும் சமூக ஆர்வலர்கள்

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

திண்டுக்கல்லில் திருவள்ளுவர் சிலை வைக்க இடம் கிடைக்காததால் கடந்த 19 வருடங்களாக தனி அறையில்  கிடப்பில் போட்டுள்ளனர்.
 

thiruvalluvar statue stalled for more than 19 years


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திருவள்ளூவர் சிலை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு  வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் 19 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு இடம் கிடைக்காமல் தனியறையில் திருவள்ளுவர் சிலை முடங்கிக் கிடப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் இலக்கியப் பேரவை சார்பில் வான்புகழ் தந்த வள்ளுவனுக்கு சிலை அமைக்க 1999 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு 500 கிலோ எடையுடன் வெண்கல சிலை தயாரானது. 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திண்டுக்கல்லில் உள்ள திருச்சி - பழனி சாலை சந்திப்பில் சிலையை நிறுவ கால்கோள் விழா நடந்தது. ஆனால் சிலை நிறுவும் இடத்துக்கு அருகில் கல்லறைத் தோட்டம் உள்ளதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருதி மாவட்ட நிர்வாகம் திருவள்ளுவர் சிலை வைக்க தடை விதித்தது.

அப்போது முதல் அந்த திருவள்ளுவர் சிலை திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள ஐயன் திருவள்ளுவர் பள்ளியில் வைக்கப்பட்டது. அதன்பின் அந்தப் பள்ளி மொட்டனம் பட்டி ரோட்டில் மாற்றப்பட்டது சிலையும் அந்த பள்ளிக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக இந்த சிலையை அமைத்த திருவள்ளுவர் இலக்கிய பேரவை செயலாளர் கணேசனிடம் கேட்டபோது, "கடந்த 19  ஆண்டுகளாக சிலை அமைக்க தமிழக முதல்வருக்கும் அதிகாரிகளுக்கும் மனு அளித்து காத்துக் கிடக்கிறேன். ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவால் சிலையை பொது இடத்தில் அமைக்க முடியாது என மறுத்து விட்டனர். மாவட்ட அரசு அலுவலகங்கள் அல்லது கல்வி அலுவலகங்களில் சிலையை வைத்தால், சற்று நிம்மதி கிடைக்கும் என காத்திருக்கிறேன். ஆனால் அதற்கும் இடம் தர யாருக்கும் மனமில்லை" என்று வருத்தத்துடன் கூறினார்.


ஆனால் உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை தந்த வள்ளுவரை வைத்து அரசியல் செய்து வரும் கட்சியினர் கடந்த 19 ஆண்டுகளாக தனி அறையில் அடைக்கப்பட்டு கிடப்பது யாருக்காவது தெரியுமா என்பது விளங்கவில்லை. அரசியல், ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு மனித வாழ்க்கையின் தத்துவத்தை ஒன்றே முக்கால் அடியில் உலகிற்கு அளித்த வள்ளுவனுக்கு திண்டுக்கலில் ஒரு இடம் கூடவா கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்களும் புலம்பி வருகிறார்கள்.
 
 

 

 

சார்ந்த செய்திகள்