Skip to main content

திருவள்ளூர் வங்கி கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? காவல்துறை விசாரணை விவரம்!

Published on 30/05/2018 | Edited on 30/05/2018

திருவள்ளூர் வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கொள்ளையர்கள் காவல்துறையினரின் விசாரணையில் அடுத்தநாளே பிடிபட்டனர். நகைகள் திருடுபோன வங்கியில் கிடைத்த தடயங்களை வைத்து கொள்ளையர்கள் தீவிர விசாரணையில் குதித்த காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி தலைமையிலான குழுவின் தேடுதல் வேட்டை விவரம் இதோ..
 

திருவள்ளூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை கிளை, கடந்த திங்கள்கிழமை காலை வழக்கம்போல் திறக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது நகை லாக்கர்கள் திறக்கப்பட்டு, கொள்ளையடிக்கப் பட்டிருப்பதைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகாரளித்த நிலையில், காவல்துறையினர் வங்கிக்கு நேரடியாக சென்று விசாரணையைத் தொடங்கினர். 
 

Bank

மீட்கப்பட்ட நகைகளுடன் காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி

 

வங்கியில் நகைக்கான லாக்கர்கள் மட்டும் திருடுபோயிருந்தன. ரொக்கப்பணமாக எதுவும் களவுபோகாத நிலையிலும், லாக்கர்களோ, சுவரோ உடைக்கப்படாமல் இருந்ததும் காவல்துறையினரிம் சந்தேகத்தை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் 8 பேரிடம் நடத்திய விசாரணையில், வங்கியின் அலுவலக உதவியாளர் விஸ்வநாதனுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வழக்கம்போல் அலுவலகத்தை மூடுவதற்கு முன்பாக சிசிடிவி மற்றும் எச்சரிக்கை அலாரங்களை விஸ்வநாதன் ஆஃப் செய்துள்ளார். அதோடு வங்கியின் லாக்கர் கதவுகள் மற்றும் முக்கிய கதவினை மூடிய விஸ்வநாதன் அவற்றின் சாவிகளை வங்கி மேலாளர் மற்றும் துணை மேலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
 

அதன்பிறகு, சிறிதுநேரம் கழித்து வந்த விஸ்வநாதன் தன்னிடம் இருந்த மற்றொரு போலியான சாவியை வைத்து லாக்கர்களைத் திறந்து, நகைகளை மட்டும் கொள்ளையடித்து, அவற்றை திட்டமிட்ட இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார். மேலும், இந்தக் கொள்ளையில் தொடர்புடைய வங்கியின் தரைதளத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஜெய்கணேஷ் மற்றும் அவரது நண்பர் கணேஷ் ஆகியோர் நகைப்பையை எடுத்துச்சென்றுள்ளனர். தற்போது கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட இம்மூவரும் கைதுசெய்யப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்