Skip to main content

'ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள்' - கடம்பூர் ராஜு பகீர்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
nn

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பிற்காக அனைத்து கட்சிகளும் காத்திருக்கும் சூழ்நிலையில் திமுக தொகுதிப் பங்கீட்டிற்கான இறுதி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தற்போது வரை கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரே கூட்டணி பிளவு கண்டிருந்த அதிமுக, பாஜக கட்சிகள் ஒன்றை ஒன்று விமர்சிக்காமல் இருந்த நிலையில், தற்போது மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றன. இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

முன்னரே கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த எடப்பாடி பழனிசாமி, இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டாம் என  கட் அன்ட் ரைட்டாக பேசியிருந்தார். எடப்பாடியின் இந்த பேச்சுக்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் அதிமுக, பாஜக வார்த்தை மோதல்கள் அதிகரித்தது. லேகியம் விற்பனை, வாய்க்கொழுப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் விமர்சனங்களை பாஜகவை நோக்கி வைத்தனர். ஆனால் மாற்றாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அதிமுகவின் தலைவர்களான ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரைப் புகழ்ந்து பேசியது மீண்டும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு அடித்தளமிடும் செயல் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

admk

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த நிமிடம் வரை பாஜக எங்களுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறது. பாஜக வலுவாக இருந்தால் அதிமுகவிற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்திருப்பதாக வரும் கணிப்புகள் எதுவும் உண்மை இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை சேர்க்க பாஜகவினர் ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள். அதிமுக பலமாக இருப்பதால் பாஜக எங்களுக்காக காத்திருக்கிறது. இல்லையெனில் ஏன் காத்திருக்க வேண்டும்?' என்ற கேள்வியை வைத்துள்ளார் கடம்பூர் ராஜூ.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.