வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் புலிகேசி. இவரது மனைவி வசந்தா. 47 வயதான வசந்தா கடந்த 6ந் தேதி இறந்தார். இவரது உடல் வீட்டுக்கு வெளியே உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வசந்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உறவினர்கள், நண்பர்கள் குடும்ப பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். அன்று மாலை உடல் அடக்கம் செய்ய இறுதிகாரியங்கள் நடைபெற்றது.
அப்போது அவரது கழுத்தில் இருந்த 20 பவுன் தங்கத்திலான தாலி சரடு காணாமல் திடுக்கிட்டனர். வசந்தா இறந்தபோதும், அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டுக்கு வெளியே வைத்தபோது இருந்த சரடு இறுதிகாரியங்கள் செய்ய முயலும்போது காணாமல் போய்வுள்ளது என்றால் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தான் யாரோ திருடியிருக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
துக்கம் நடந்த வீட்டில் யார் மீது சந்தேகப்படுவது என யோசித்த குடும்பத்தார் மஞ்சள் தாலி சரடை கழுத்தில் மாட்டி இடுக்காட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். அடக்கம் செய்தபின் குடும்ப உறவு பெண்களிடம் விசாரித்தபோது, உடல் அருகே அமர்ந்து சில பெண்கள் குழுமி உட்கார்ந்து அழுதார்கள். அவர்கள் நமக்கு உறவினர்கள் கிடையாது, யார் என்றும் தெரியாது, இந்த பகுதியில் பார்த்ததும் கிடையாது எனச்சொல்ல அதிர்ச்சியாகினர். இதுப்பற்றி வசந்தாவின் மகன் பிரபு, திருப்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார்.
தமிழ்சினிமாவில் வினுசக்கரவர்த்தி ஒருப் படத்தில் இறந்ததுப்போல் நடிப்பார். அப்போது துக்கத்துக்கு வருபவர்கள், அவர் அணிந்திருந்த மோதிரங்கள், கழுத்து செயின் என திருடிச்செல்வார்கள். மற்றொருப்படத்தில் இறந்தவர் நெற்றியில் உள்ள பணத்தினை பார்த்திபன் அபேஸ் செய்வார். அதுயெல்லாம் காமெடிக்காக திரைப்படத்தில் வைக்கப்பட்டது. ஆனால் நிஜமாகவே இறந்துப்போன பெண்ணின் இறுதிகாரியத்துக்கு வந்து பிணத்திடம் திருடி சென்றது பொதுமக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
சாலைகளில் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்கள், காயம்பட்டு மயக்கமடைந்தவர்களிடம் திருடியவர்கள், தற்போது துக்கவீட்டுக்கு வந்து இறந்தவர்கள் உடல் மீதுள்ள நகையையே திருடியுள்ளார்கள். இந்த புகாரை வாங்கிய போலீசார், இந்த புதுவித திருடர்கள் யார் என தெரியாமல் 3 நாட்களாக மண்டையை போட்டு பிய்த்துக்கொண்டுள்ளனர்.