Skip to main content

காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்... குவியும் பாராட்டு!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

காயமடைந்த நிலையில் உணவு உட்கொள்ள முடியாத நிலையில் இருந்த மயிலுக்கு, சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டு குவிகிறது. 
 

மயில்களின் சரணாலயம் விராலிமலை என்று புத்தகங்களில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அங்கே மயில்கள், குரங்குகளுக்கு பாதுகாப்பாக வாழ வழியில்லாத இடமாக மாறிவிட்டது. வனங்கள் அழிக்கப்பட்டு தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கும் சீமைக்கருவேல மரங்களும், தைல மரக்காடுகளையும் அரசு வளர்க்கத் தொடங்கியதும் தேசிய பறவைகள் வாழ வழியற்றி இப்படி உணவுக்காகவும், தண்ணீருக்காகவும், பாதுகாப்புக்காகவும் வெளியிடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது மயில்கள். இப்படி இடம் பெயரும் மயில்கள் மற்றும் மான், குரங்குகள் அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்கி மடிகின்றன. பல இடங்களில் தோட்டங்களில் வைக்கப்படும் விஷம் தின்று மடிகின்றன.

thanjavur district vilailmalai peacock incident youngsters

தஞ்சாவூர் மாவட்டம், பழைய பேராவூரணியில், காலில் காயமடைந்த நிலையில் முட்புதரில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மயில் மயங்கிக் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து, அங்கு சென்ற பேராவூரணியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மருத.உதயகுமார், பழைய பேராவூரணி மணிகண்டன், திருச்சிற்றம்பலம் அருண் ஆகியோர் அந்த மயிலைப் பிடித்தனர். 
 

இதுகுறித்து, பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது ஆலோசனையின் பேரில், பேராவூரணி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கால்நடை மருத்துவர் ஏ.ரவிச்சந்திரன், கால்நடைத்துறை முதுநிலை மேற்பார்வையாளர் இந்திராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனடியாக மயிலுக்கு சிகிச்சை அளித்தனர். 

இதில் பறக்கும் போது மரக்கிளையில் மோதி காலில் லேசான அடிபட்டிருந்தது தெரிய வந்தது. சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் தேறிய மயில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால் முன்னிலையில், வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, காப்புக் காட்டில் பறக்க விடப்பட்டது. 

அப்போது பேராவூரணி வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், கிராம நிர்வாக அலுவலர் ரமணி, கிராம உதவியாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். காயமடைந்த தேசியப் பறவையான மயிலை மீட்டு, சிகிச்சை அளிக்க உதவிய இளைஞர்களை வட்டாட்சியர், வனச்சரக அலுவலர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
 

பறவைகள், வன விலங்குகளை பாதுகாக்க தைல மரக்காடுகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அழித்து அரசு நிலங்களில் மீண்டும் வனங்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் நீர்நிலைகளும் பாதுகாக்கப்படும், வன விலங்குகள், பறவைகளும் பாதுகாக்கப்படும். 
 

 

சார்ந்த செய்திகள்