Skip to main content

பள்ளிக்கூடமா? ஜவுளிக்கடையா? - அரசுப் பள்ளியில் அவலம்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Teachers ignore students in government schools in Coimbatore district

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே அமைந்துள்ளது கிணத்துக்கடவு பேரூராட்சி. இந்த பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் இந்த பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதிலும், சிங்கய்யன்புதூர், கோதவாடி, தாமரை குளம், கோவில்பாளையம், அரசம்பாளையம், பகவதி பாளையம், வீரப்ப கவுண்டனூர் என கிணத்துக்கடவைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் இந்த அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

 

தற்போது, இந்த பள்ளியில் 65 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், இதன் தலைமையாசிரியராக தேன்மொழி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இத்தகைய சூழலில், இந்த பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் தங்களுடைய பொறுப்பை சரியாக செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்கவில்லை எனவும், நேரத்தை வீணாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

மேலும், இதுகுறித்து புகார் அளித்தும் தலைமையாசிரியர் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த அரசுப் பள்ளியில் வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களும் விற்கப்படுகிறது. இத்தகைய சூழலில், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் ஒன்று வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மாணவர்கள் நிறைந்த ஒரு வகுப்பறையில் ஏராளமான புடவைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோவில் இருக்கும் ஒரு நபர், அந்த துணிகளை ஆசிரியர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். அந்த சமயத்தில், வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடம் எடுக்காத ஆசிரியர்கள் புடவை விற்பனை செய்யும் இடத்திற்கு வந்து மும்முரமாகப் புடவை எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எந்த அவசரமும் கொள்ளாமல் நிதானமாகப் புடவையை செலக்ட் செய்து வாங்கிச் செல்கின்றனர். 

 

அப்போது, அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் அந்த காட்சி முழுவதையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதன்பிறகு, அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, ஆசிரியர்களின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் நேரத்தை வீணாக்கும் ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தற்போது, இதுதொடர்பான வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்