Skip to main content

‘பயிற்சி வகுப்பில் நாற்காலிகள் இல்லை’ - அதிகாரியிடம் ஆசிரியர்கள் ஆவேசம்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Teachers are angry with the authorities for lack of chairs in the training class

 

கரூர் மாவட்டம் குளித்தலையில் இரண்டாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பறையில் நாற்காலிகள் இல்லாததால் மாவட்ட உதவி திட்ட அலுவலரிடம் ஆவேசம் அடைந்த  ஆசிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தோகை மலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட வட்டாரங்களில் தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 3 மற்றும் 4 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இன்று காலை குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  துவங்கியது.

 

பயிற்சி அறைக்கு வந்த ஆசிரியர்கள் சிலர்  ஆசிரியர்களுக்கு  நாற்காலிகள் வழங்காமல் பெஞ்ச்சில் உட்கார சொல்வதா? பெஞ்ச்சில் உட்கார்ந்தால் சிரமம் ஏற்படாதா? என  வட்டார கல்வி அலுவலரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் நீடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். 

 

தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராமன் வெளியே நின்று கொண்டிருந்த ஆசிரியர்களிடம் அரசு பள்ளி வகுப்பறைகளில் பெஞ்ச் தான் இருக்கும் நீங்கள் அனுசரிக்க வேண்டுமென கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அரசு பள்ளி இப்படித்தான் இருக்கும் என மாவட்ட உதவி திட்ட அலுவலர் தெரிவித்ததாக கூறி சில ஆசிரியர்கள் ஆவேசத்துடன் பயிற்சி வகுப்பை விட்டு வெளியேறினர். இதனால் சில மணி நேரம் அந்தப் பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

 

இதுகுறித்து மாவட்ட உதவி திட்ட அலுவலரிடம் கேட்டபோது, சில ஆசிரியர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளதாலும் சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தை மையப்படுத்தி சில ஆசிரியர்கள் இது போன்று தவறாக கூறுவதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதி முழுவதும் மேலும்  பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்