Skip to main content

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை... போதை ஆசாமிகளின் புலம்பல்...

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
tasmac shop open issue



கடந்த 43 நாட்களுக்கு பிறகு கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. 43 நாட்கள் ஏங்கிக் கிடந்த மது பிரியர்கள் வேகாத வெயிலிலும் குடை பிடித்துக்கொண்டு பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.


சாதாரண ஏழை, நடுத்தர மக்களுக்கு வருமானம் இல்லை. நீண்ட நாட்கள் அரசின் தடை உத்தரவால் பட்டினிச் சாவுகள் அதிகரிக்க உள்ளன என பேசப்பட்ட நிலையில், 7ம் தேதி ஒரு நாள் வசூல் மட்டும் 170 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. மதுபானங்களின் விலை உயர்வை பற்றியோ, பணத்தை பற்றியோ மது பிரியர்கள் கவலைப்படவில்லை. மதுபாட்டில் கிடைத்தால் போதும், அதுவே எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று குடித்து ஆடினார்கள் மது பிரியர்கள். ஆனால் இன்றைய நிலையோ, அவர்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதை போல ஆகிப்போனது என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள். 

டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்று தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் 17ஆம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது.

 

 


இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்று மேல்முறையீடு செய்துள்ளது. இது ஒரு பக்கம். ஆனால் நீதிமன்ற உத்தரவை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். அதோடு நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

அரசு இனி கடையை மூடாது, வரும் நாட்களில் கூட்டம் குறைந்து விடும் சாவகாசமாக சென்று வாங்கி குடிக்கலாம் என்று எண்ணியிருந்தனர் டாஸ்மாக் பிரியர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மீண்டும் கடையை மூட சொல்லி உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட தகவல்களைகூட தெரிந்துகொள்ளாமல் காலையில் எழுந்ததும் கண்களை துடைத்துக்கொண்டு டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்று வந்து பார்த்துவிட்டு  ஏமாற்றத்துடனும், ஏக்கத்துடனும் திரும்பி சென்றுள்ளனர் தீவிர மது பிரியர்கள். இவர்களுக்கு என்றுதான் தணியுமோ இந்த மது மீதான தாகம். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்