முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயகுமார் மீது வழக்குப் பதியக்கோருவது பற்றி பதிலளிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெண்டர் முறைகேடு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், 12,524 கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க ரூபாய் 1,950 கோடிக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பெரும்பாலான நிறுவனங்களை நிறுத்தி வைத்து விட்டு இரண்டு நிறுவனத்துக்கு மட்டும் டெண்டர் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் டெண்டர் முறைகேடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (16/06/2020) விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெண்டர் முறைகேடு வழக்கில் முதல்வர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை. தஞ்சை நெடுஞ்சாலை டெண்டரில் யாரும் பங்கேற்காத நிலையில் ஊழல் நடந்ததாக வழக்கு தொடரப்பப்பட்டுள்ளது. புகாரில் முகாந்திரம் இல்லை என முடிவெடுத்து புகாரை முடித்து வைத்துவிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி சதீஸ்குமார், டெண்டரே ஒதுக்காதபோது ஊழல் என எப்படி குற்றம் சுமத்த முடியும்? என கேள்வி எழுப்பினார். மேலும் ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கக்கோரி வழக்கை ஜூன் 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ஊழல் குற்றச்சாட்டு கூறிய வழக்கை வாபஸ் பெறுவதே முறையாக இருக்கும் என மனுதாரரை அறிவுறுத்தினார்.