கடலூர் அருகிலுள்ளது திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் இந்த கோயிலில் திருமண முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இக்கோயிலில் வந்து திருமணம் செய்துகொள்வது நடைமுறையில் உள்ளது. இங்கு திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் வாழ்வில் குறைவின்றி பொருட்செல்வம் மக்கள் செல்வம் நோய் நொடியின்றி வாழ்கிறார்கள். தேவநாதசுவாமி அருளால் என்ற அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கையால் இக்கோயிலில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.
சிலநேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. திருமணத்திற்கு வரும் உற்றார், உறவினர்கள் திக்குமுக்காடி போவார்கள். அந்த அளவிற்கு திருமண நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அப்படிப்பட்ட கோவிலில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கரோனா பரவல் காரணமாக திருமணங்கள் நடைபெற வில்லை, பக்தர்கள் தரிசனம் இல்லை. இதனால் கோவில் திறக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளைஅறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஒன்றாம் தேதி முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பல்வேறு விதிமுறைகள் படிபக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் இக்கோவில் அருகில் உள்ள மண்டபங்களில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டம் அனுமதிக்கப்பட்டாலும் கோவிலுக்குள் திருமணம் நடைபெற அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் கோவிலுக்கு வெளியில் உள்ள மண்டபங்களில் திருமணங்களை செய்த திருமண ஜோடிகள் பின்னர் கோவிலுக்கு வெளியே நின்று தேவநாத சுவாமி தரிசனம் செய்தனர் .கோவிலுக்கு வெளியில் சென்று சாமி தரிசனம் செய்யும் போதும் கூட அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே கோவில் முன்பு நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 மாதங்களாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை குறைந்து களை இழந்து காணப்பட்டது. கோவில் வளாகம் தற்போது மீண்டும் பக்தர்கள் வருகையாலும் திருமணங்கள் நடைபெறுவதாலும் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பியுள்ளது. தேவநாத சுவாமியின் அருளால் இங்கு வரும் பக்தர்களும் திருமணம் செய்துகொள்ளும் மணமக்களும் குறை இன்றிவளமோடு வாழ்வார்கள் என்று வாழ்த்துகிறார்கள் கோயில் அர்ச்சகர்கள்.