தமிழ்நாட்டில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் ஒரே இடத்தில் திரண்டு வந்தால் அவர்களை ஒழுங்கு படுத்துவதற்கும், அவர்களின் தேவைக்கு வழிகாட்டுவது என இரவுபகலாக காத்திருந்து கண்விழித்து தொடர்ச்சியாக ரெகுலர் போலிசுக்கு இணையாக அதற்கு ஒரு படி அதிகமாகவும் வேலை செய்யும் ஊர்காவல் படையினர் தற்போது மிகவும் வறுமையில் இருக்கிறோம்.
உதாரணமாக தற்போது அத்தி வரதர் விழாவிற்கு ஒரு நாளைக்கு குறைந்தது 1000 ஊர்காவல் படையினர் தொடர்ச்சியாக வேலை செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களோ எங்களுடைய சம்பளத்தை உச்சநீதிமன்ற உத்தரவு படி உயர்த்தவில்லை. எங்களுக்கு தொடர்ச்சியாக வேலை தர வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கிறார்கள் ஊர்காவல் படையினர்.
இது குறித்து ஊர்காவல்படையினர் சிலர் நம்மிடம் பேசினார்கள்…
தமிழ்நாடு காவல்துறையின் ஒரு அங்கமாக செயலாற்றி வருவது ஊர்காவல்படை. தமிழ்நாடு முழுவதும் சுமார் 15 ஆயிரத்து 622 பேர் , கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் முழுவதும் பணியும் மாதம் 4500 ரூபாய் சம்பளமும் அளிக்கப்பட்டு வந்தது.
இதன்பிறகு உச்சநீதிமன்றம் நாள்தோறும் பணியும் மாதம் 16 ஆயிரத்து 800 ரூபாய் சம்பளமும் வழங்கப்பட வேண்டுமென உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஆந்திரா, ஒரிஷா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இந்த உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு திடீரென 5 நாள் மட்டுமே பணி வழங்கி, மாதம் ஒன்றுக்கு 2800 ரூபாய் சம்பளம் எனக் குறைத்துக்கொண்டது.
இதனால் எங்கள் ஊர்காவல்படையினரின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற ஆணையை கடைபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம். காவல்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது, பொதுமக்கள் கூடும் இடங்கள், திருவிழாக்கள், இரவு ரோந்து பணிகள், குற்றங்களைத் தடுத்தல், விஐபி பாதுகாப்பு, என அனைத்து பணிகளிலும் தீடீர் தீடிர் என அழைத்து பயன்படுத்திக் கொண்டு மாதம் 2800 ரூபாய் சம்பளம் வழங்குவது போதுமானதாக இல்லை என முறையிட்டனர்.
இது தொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர், காவல்துறை டிஜிபி ஆகியோரிடம் மனு அளித்தோம். நடப்பு சட்ட மன்ற கூட்டத்தில் கூட காவல்துறை மானியக்கோரிகையின் போது, தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் பணி அங்கீகாரம் மற்றும் சம்பள உயர்வினை அறிவிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் கடைசியில் ஏமாற்றம் தான் என்றார்கள்.
திருச்சியில் மட்டும் மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மாதம் 5 நாள் மட்டும் கொடுத்த வேலையை 10 நாட்கள் என்று மாற்றினார். ஆனால் அதற்குள்ளாக அதிகாரிகள் சிலர் அவரிடம் ஏதேதோ சொல்லி மீண்டும் 5 நாட்களாக மாற்றி எங்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்து விட்டார்கள் என்றார்.