'செப்டம்பர் 5' ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்கள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
இதில் ஆளுநர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர், ''பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தினால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, கற்றல் பணிகளின் மேம்படுத்தப்படும். மாநில அரசு மத்திய அரசு உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்கப்படும். பல்வேறு மாநிலங்கள் இதில் இணைந்து வருகின்றன. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் முதலில் சேர ஒப்புக்கொண்ட தமிழக அரசு பின்னால் ஏற்க மறுக்கிறது. மாணவர்கள் பகுப்பாய்வு செய்து படிப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. தமிழக அரசு காலம் தாழ்த்துவதால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான்'' என பேசியுள்ளார்.