Skip to main content

மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Tamil Nadu Chief Minister writes letter to Union Foreign Minister demanding release of fishermen

 

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (07/01/2022) கடிதம் எழுதியுள்ளார். 

 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இலங்கை சிறையில் வாடும் 56 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கவும், 75 மீன்பிடிப் படகுகளை மீட்க வலியுறுத்தியும் இன்று (07/01/2022) கடிதம் எழுதியுள்ளார். 

 

தமிழ்நாடு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 மற்றும் 20- ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

மேலும், இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களுக்குச் சொந்தமான, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத 75 மீன்பிடிப் படகுகளையும் மீட்டெடுக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் கோரியுள்ளார். வரவிருக்கிற பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறையில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்திடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குரிய உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்திடக் கேட்டுக் கொள்வதாகவும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எழுதியுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்