Skip to main content

‘28 நாட்களில் மட்டும் 88 மீனவர்கள் கைது; 12 படகுகள் சிறை’ - தமிழக முதல்வர் கண்டனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Tamil Nadu Chief Minister condemned says 88 fishermen arrested in 28 days only

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 400 படகுகளில் வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்து விட்டு கரை திரும்பிக்  கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 19 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் அவர்களிடம் இருந்த இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. கைதான மீனவர்கள் 19 பேரையும் விசாரணைக்காக காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திடவும், உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது மற்றும் மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையும், இதனால் பல தலைமுறைகளாக இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தைத் தவிர்த்து, கடந்த சில ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பாரம்பரியமாகத் தமிழ்நாடு மீனவர்கள் பயன்படுத்தி வரும் மீன்பிடிப் பகுதிகள் இலங்கைக் கடற்படையினரால் கட்டுப்படுத்தப்படுவதையும், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் பெருமளவில் பாதித்துள்ளதோடு, மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ள அவர்களின் கலாச்சார மற்றும் சமூகக் கட்டமைப்பிற்குப் பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கடந்த 28 நாட்களில் மட்டும், 6 சம்பவங்களில், 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்படுத்தும் சேதங்கள் கவலையை மேலும் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இதுபோன்ற செயல்கள் மீனவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், மீனவர்களுக்கு பொருளாதார பாதிப்புகளை மேலும் அதிகரித்துள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்கிட இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரமளிக்கும் வகையில், 2018 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் கடல்சார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக, முன்னரே தான் எழுதியிருந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்ததைக் குறிப்பிட்டு முதலமைச்சர், இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால், நல்ல நிலையில் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்டு, தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர முடியவில்லை என வேதனையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Tamil Nadu Chief Minister condemned says 88 fishermen arrested in 28 days only

பல மீனவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு, தங்களது வர்த்தகத்திற்கு இன்றியமையாத படகுகளை வாங்குவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் முதலீடு செய்துள்ளதையும், முறையான இழப்பீடு அல்லது மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லாமல், படகுகள் இதுபோன்று நாட்டுடைமையாக்கப்படுவது. மீனவர்களையும், அவர்களது குடும்பங்களையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகளைத் திரும்பப் பெற்றிடவும், படகுகளை உடனடியாக விடுவித்திடவும் ஏதுவாக, மேற்படி சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்திடவேண்டுமென்று முதலமைச்சர், தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

'தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வினை உறுதி செய்திடவும், மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிகளைப் பின்பற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர், கூட்டு நடவடிக்கைகளின் மூலம் இது சாத்தியமாகும் என்பதால், இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பிக்க, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்குமாறும் தனது கடிதத்தில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை வசம் தற்போதுள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த 3-1-2024 அன்று பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களையும், 5-12-2023 அன்று குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ்நாட்டு மீனவர்களையும் விடுவித்திடவும். உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்